×

15ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடற்கரை கிராமங்களில் அனுசரிப்பு

திருப்போரூர், டிச. 27: சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள், அதன்  15ம் ஆண்டு நினைவு தினத்தை நேற்று கடற்கரை கிராமங்களில் அனுசரித்தனர். இதையொட்டி மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் சென்னையில் இருந்து கல்பாக்கம் வரை உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டன. இதனால் ஆண்டு தோறும் இந்த நாளை சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதையொட்டி நேற்று, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, புது கல்பாக்கம், நெம்மேலி, சூளேரிக்காடு, பட்டிபுலம் உள்பட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி இருந்தனர். மேலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வீடுகள் மற்றும் படகுகளில் கருப்புக் கொடியேற்றி தங்களின் நினைவுகளை பறக்க விட்டனர்.  ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் உள்ள அம்மன் கோயில்களில் இருந்து மீனவ மக்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக சென்று இறந்தவர்களின் நினைவாக கடலில் ஊற்றினர். நெம்மேலி, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரையில் பால் ஊற்றி சுனாமியால் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். மேலும் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களின் படங்களை கையில் ஏந்தியபடி, அவர்களை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்.

Tags : Tsunami Memorial Day ,
× RELATED கல்பாக்கத்தில் சுனாமி நினைவு தினம்...