×

தீபாவளி சீட்டு கட்டிய 500 பேரை ஏமாற்றி 2.5 கோடியுடன் அடகு கடைக்காரர் எஸ்கேப்: மதுராந்தகம் அருகே பரபரப்பு

சென்னை:மதுராந்தகம் அடுத்த பூதூர் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தானை சேர்ந்த ராம்தேவ் (50) என்பவர் அடகுக்கடை நடத்தி வந்தார். அவர், மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து  குடும்பத்துடன் தங்கினார். கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டு சீட்டு நடத்திய ராம்தேவ், பொதுமக்களிடம் சீட்டு பிடித்து வந்துள்ளார். பொதுமக்கள் மாதம் 1000, 2000 என 12 மாதங்களுக்கு செலுத்தினால், தங்கம் மற்றும் மளிகை உள்பட  பல பொருட்கள் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பேரில் பூதூர், ஈசூர், வல்லிபுரம், தச்சூர், பெரும்பாக்கம் உள்பட பல கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என  500 பேர், ராம்தேவிடம் சீட்டு மற்றும் பண்டு கட்டினர்.  பின்னர், 12 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த தீபாவளியின்போது சீட்டு கட்டியவர்களுக்கு தரவேண்டிய நகை மற்றும் பொருட்களை அவர் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இந்த தீபாவளியின்போது ராம்தேவ் பிடித்த பண்டு  மதிப்பு சுமார் ₹1 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி முடிந்தும் பொருட்களை கொடுக்காமல் காலம் கடத்தி, ஒரு சில தினங்களில் அனைவருக்கும் கொடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதை நம்பி பணம் கட்டியவர்களும் காத்திருந்தனர். ஆனால், கடந்த சில  தினங்களாக அவரது அடகுக்கடை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால், பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். பின்னர், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால்  அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர் வசித்த வாடகை வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. அப்போது அவர், குடும்பத்துடன் தலைமறைவானது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரிடம் சீட்டு கட்டிய 100க்கும்  மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் நேற்று படாளம் காவல் நிலையத்துக்கு சென்றனர். அங்கு, ராம்தேவ் மீது புகார் அளித்தனர்.

ஆனால் போலீசார், புகாரை பெற மறுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கும்படி கூறினர். அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், தங்களது புகாரை பெற்றுக் கொள்ளும்படி கூறி, காவல் நிலையம் முன்பு  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், புகாரை பெற்றுக் கொள்வதாக உறுதிளித்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கலைந்து சென்றனர். போலீசாரின் விசாரணையில், ராம்தேவ் அடகுக்கடையில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர் அதன் மதிப்பு 1.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும்,  சீட்டு பண்டு 1 கோடி, அடகு வைத்த பணம் 1.5 கோடி என மொத்தம் ₹2.5 கோடியுடன் அவர், குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார் என தெரியவந்துள்ளது.

Tags : Mortgage Store ,
× RELATED தீபாவளி சீட்டு கட்டிய 500 பேரை ஏமாற்றி 2.5...