×

வெகு தொலைவிற்கு சென்று வாக்களிப்பதில் சிரமம் தேர்தலை புறக்கணிக்க மாற்றுத்திறனாளிகள் முடிவு

பள்ளிபாளையம், டிச.25: வாக்களிக்க வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளதால் பள்ளிபாளையம் அருகே தட்டாங்குட்டையில் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக மாற்றுதிறனாளிகள் அறிவித்துள்ளனர். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் காலனி உள்ளது. இங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2 கி.மீ., தொலைவில் உள்ள வளையக்காரனூர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். குடியிருப்புக்கு அருகில் உள்ள தட்டாங்குட்டை வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளை வாக்களிக்கச் செய்யாமல், வளையக்காரனூருக்கு மாற்றியது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி பள்ளிபாளையம் ஒன்றிய தேர்தல் அதிகாரி அலமேலுவை நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது, அவரிடம் குடியிருப்புக்கு அருகில் உள்ள தட்டாங்குட்டை வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை எனவும், சட்டமன்றத் தேர்தலில் ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், அதிருப்திகுள்ளான மாற்றுத்திறனாளிகள், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்றும், சட்டமன்ற தேர்தலுக்கே தாங்கள் வாக்களிப்போம் எனவும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் கூறுகையில், தட்டாங்குட்டை மாற்றுத்திறனாளிகள் காலனியில் 32 வாக்காளர்கள் உள்ளனர். அருகில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக் முடியாமல், 2 கி.மீ., தொலைவுக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும், கோரிக்கை குறித்து பரிசீலிக்காமல் சட்டமன்றத் தேர்தலில் மாற்றிக்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, எங்கள் கோரிக்கையை பரிசீலிக்காத அதிகாரிகளை கண்டித்து உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்றார்.  நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு இல்லாத நிலையில், மாற்றுத் திறனாளிகளின் தேர்தல் புறக்கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : election ,
× RELATED தேர்தல் திருவிழாவில் ருசிகரம்!:...