×

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சேலம், டிச.25: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா களை கட்டியுள்ளது. மாட்டுத் தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டன. இதேபோல், இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் வீடுகளிலும் ஸ்டார் தொங்க விடப்பட்டு, குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயத்தில் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப், பங்கு தந்தை ஜான் போஸ்கோ பால், ஆசீர்வாதம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில், ஆயிரக்கணக்கனோர் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
 
இதேபோல், சேலம் 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பங்கு தந்தை ஜான்ஜோசப் தலைமையிலும், அழகாபுரம் புனித மிக்கேல் ஆதி தூதர் ஆலயத்தில் பங்கு தந்தை சாலமன்ராஜ் தலைமையிலும்,  வாழப்பாடி பக்தாம் பக்திநாதர் ஆலய பங்கு தந்தை விமல் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சேலம் சிஎஸ்ஐ பரி திரித்துவ ஆலயம் ஆயர் சாந்திபிரேம்குமார் தலைமையிலும், சிஎஸ்ஐ லெக்லர் நினைவாலயம் ஆயர் எழில்ராபர்ட் கெவின் தலைமையிலும்,  சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் ஜவஹர் வில்சன் ஆசீர் டேவிட் தலைமையிலும், ஏற்காடு சிஎஸ்ஐ ஷைலோ மில்லினம் சர்ச் ஆயர் சுவிசேஷரத்தினம் அதிகாலையில் பிரார்த்தனை நடந்தது.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள தேவாலங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து இந்த ஆலயங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : churches ,
× RELATED தேவாலய பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்யானந்த் நியமனம்