×

மனுகுலம் மீட்படைய நிகழ்ந்த 2 அற்புதங்கள்

இறை மைந்தன் இயேசு விண்ணை விட்டு மண்ணிற்கு வந்தது ஓர் அற்புதம். அதே இறைவன் மண்ணை விட்டு விண்ணிற்கு சென்றது மற்றொரு அற்புதம். இவ்விரண்டும் மனுகுலம் மீட்படைய வேண்டும் என்பதற்காக தான். பாவம் மனிதனையும் கடவுளையும் பிரிக்கின்றது. அவர்களை இணைக்க இயேசு கிறிஸ்து பெத்தலகேம் பாலகனாய் இவ்வுலகிற்கு வந்தார். தன் பாடு, மரணத்தின் மூலம்  சிலுவையில் சமாதானத்தை ஏற்படுத்தினார்.   தேவன் நம் மீது அன்பு கூர்ந்தபடியினால் மனிதனானார். அவர் பாவத்தை வெறுத்தாலும் பாவியை  நேசிக்கிறவர். இந்த அன்புதான் அவர் பரலோகம் விட்டு இப்பூலோகம் வரச் செய்தது. யோவான் 3:16ல் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என வேதம் கூறுகிறது. யோவான் 1:14ல் அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்பதாக வாசிக்கிறோம். பாவியாகிய நம்மீது அன்பு வைத்த தேவனை முழு இருதயத்தோடு அன்பு கூர்ந்து பண்டிகையை ஆசரிப்போம். பாவம்  மனிதனுக்கும் இறைவனுக்கும் பகையை உண்டாக்கினது. இயேசு மனிதனாய் பிறந்தபோது பரமசேனையின் திரள்.... உன்னதத்திலே மகிமை, பூமியிலே சமாதானம் மனிதர் மேல்  பிரியம் என்று கீதம் பாடினார்கள். கல்வாரி சிலுவையின் வாயிலாக தம்  ரத்தத்தின் மூலமாக இயேசு கிறிஸ்து இருத்திறத்தாரையும் ஒப்புரவாக்கினார்.  நாம் நம் பாவங்களை களைந்து பரிசுத்தத்தோடு பண்டிகையை கொண்டாடுவோம்.

  யோவான் 1: 18ல் தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற  ஒரே பேறான குமாரனே அவரை நமக்கு வெளிப்படுத்தினார் என்று வேதம் கூறுகிறது.  1கொரிந்தியர் 1:21ல் உலகமானது சுய ஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில்  பைத்தியமாய் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை ரட்சிக்க தேவனுக்கு  பிரியமாயிற்று என்று பவுல் கூறுகிறார். உலகமானது தேவனை அறியாதப்படியினால்  அவரை வெளிப்படுத்தி அவருடைய அருகாமையை அனுபவிக்கும்படியாக இயேசு கிறிஸ்து  வந்தார். என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்ற இயேசு கிறிஸ்துவின் கூற்று  அதையே வெளிப்படுத்துகிறது. தேவகுமாரன் தம்மை வெளிப்படுத்தவே மனிதனானார்  என்பதை அறிந்து அகமகிழ்வுடன் பண்டிகையை கொண்டாட ஆயத்தப்படுவோம்.

Tags :
× RELATED பாக்கு, வாழை மரங்கள் முறிந்தன