×

இருக்கன்குடி கோயிலில் பக்தர்கள் விடுதியை திறக்க கோரிக்கை

சாத்தூர், டிச. 25:  இருக்கன்குடி கோயிலில் சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்ட பக்தர்கள் விடுதியை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மார்கழி, தை, ஆடி ஆகிய மாதங்கள் விஷேசமாக கருதப்படுகிறது. இதில், ஆடி கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா மிகசிறப்பாக நடைபெறும். இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், இவர்கள் கோயிலில் தங்குவதற்கு நிர்வாகம் சார்பில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால், கோயிலைச் சுற்றியுள்ள பிரகார மண்டபத்தில் பக்தர்கள் தங்குகின்றனர். இதனால், பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரம் கண்பானை, உருண்டு கொடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த அவதிப்படுகின்றனர்.

திறக்கப்படாத காலணி காப்பகம்
பக்தர்களின் கோரிக்கையின் பேரில், கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய காலணி காப்பகம் கட்டப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. மேலும், சுற்றுலாத் துறை சார்பில் கோயிலின் அருகே கட்டப்பட்ட பக்தர்களுக்கு தங்கும் விடுதியும்  திறக்கப்படாமல் உள்ளது. எனவே பக்தர்களின் நலன் கருதி, காலணி காப்பகத்தையும், தங்கும் விடுதியையும் விரைவில் திறக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pilgrims ,Open Inn ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்