×

உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பொங்கல் வரை கரும்பை பாதுகாக்க வேண்டும் கவலையில் மேலூர் பகுதி விவசாயிகள்

மேலூர், டிச. 25: நீதிமன்ற தடையால் கரும்புகளை வெட்ட முடியாமல் மேலூர் பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அறுவடைக்கு தயாரான அக்கரும்புகளை பொங்கல் வரை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலூர் பகுதியில் எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, நாவினிப்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், சருகுவலையபட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி பகுதிகளில் ஆண்டு தோறும் ஏராளமாக செங்கரும்புகள் பயிரிடப்படுவது வழக்கம். இது உள்ளூர் மட்டுமல்லாது, வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் வரை வெட்டி அனுப்பப்படும்.

இந்நிலையில் ஆண்டு தோறும் அரசு வழங்கும் பொங்கல் பரிசுடன் கொடுக்கப்படும் கரும்புகளுக்காக இப்பகுதியிலேயே அதிகம் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனால் வழக்கமாக பயிரிடப்படும் கரும்புகளை விட கூடுதலாகவே கரும்புகள் சில ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை காரணம் காட்டி தமிழக அரசு 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசினை வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவு எதிர் கட்சிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இப்பகுதியில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

பொங்கலுக்கு முதல் மாதத்தில் இருந்தே இப்பகுதியில் வியாபாரிகள் முகாமிட்டு விவசாயிகளிடமிருந்து கரும்புகளை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வியாபாரிகளின் வருகை உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குறைவாகவே காணப்படுகிறது. அத்துடன் பொங்கல் பரிசு வழங்க பொது விநியோகத் துறையினரும், கூட்டுறவு சங்கத்தினரும் கரும்பை கொள்முதல் செய்யாததால் கரும்பு விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். தேர்தல் முடிந்து எப்போது வந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றும், அதுவரை அறுவடைக்கு தயாராக உள்ள கரும்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் மேலூர் பகுதி விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags : Mallur ,area farmers ,Pongal ,
× RELATED ரூ.7.86 கோடி தங்கம் பறிமுதல்