×

ஊட்டி-கல்லட்டி சாலையில் விபத்துகளை தவிர்க்க ரோலர் கிராஸ் பேரியர் அமைப்பு

ஊட்டி, டிச. 25:   ஊட்டி-கல்லட்டி  மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க ரோலர் கிராஸ் பேரியர் அமைக்கப்பட்டுள்ளது.  
 நீலகிரி  மாவட்டத்திற்கு தினமும் வெளி  நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில்  பெரும்பாலனவர்கள் ஊட்டி அருகேயுள்ள மசினகுடி, முதுமலை புலிகள்  காப்பத்திற்கு செல்கின்றனர். இவர்கள் தலைகுந்தா, கல்லட்டி மலைப்பாதை வழியாக  செல்கின்றனர். அதேபோல், கர்நாடகம் மாநிலம் மைசூர் செல்ல இவ்வழித்தடம்  குறுக்கு பாதை என்பதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள், வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் இச்சாலையையே பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம்  அவர்களுக்கு நேரம் மட்டுமின்றி, தொலைவும் மிச்சமாகி வந்தது. ஆனால்,  செங்குத்தான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இச்சாலையில் வெளியூர்களில்  இருந்து வருபவர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்க தெரிவதில்லை. இதனால்,  இவர்கள் இச்சாலையில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர்.  இதில் குறிப்பாக,  கேரள மாநில வாகனங்கள், வேன்கள் அதிகளவு விபத்தில் சிக்கி வந்தன. இதனால்,  இவ்வழித்தடத்தில் முதலில் வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல கடந்த சில  ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. பின், கேரள மாநிலங்களில் இருந்து  வரும் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும், தொடர்ந்து  விபத்துக்கள் நடந்த வண்ணம் இருந்தது. இறுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்து  மூன்று நாட்களுக்கு பின்னரே தகவல் தெரிய வந்தது. மேலும், மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்த 5  பேருடன், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  இந்த விபத்தையடுத்து  இச்சாலையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல அன்று முதல் தடை  விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உள்ளூர் வாகனங்கள்  மட்டுமே இச்சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வெளியூர் வாகனங்கள்  மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

 இதனால்,  இச்சாலையில் விபத்துக்கள் முற்றிலும் குறைந்தது. ஆனால்  சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றனர். இது ஒரு புறம்  இருக்க நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலையை பாதுகாப்பு மிகுந்த சாலையாக மாற்ற  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கள் அதிகம்  நடக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து  வருகின்றனர். இந்நிலையில் மலேசியா நாட்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  சாலையோரங்களில் ரோலர் கிராஸ் பேரியரை அமைக்க திட்டமிட்டனர். இதன்படி, கடந்த  ஆண்டு விபத்து நடந்த 35 - 36வது வளைவுகளுக்கு இடையே இந்த ரோலர் கிராஸ்  பேரியரை அமைத்துள்ளனர். இனி இப்பகுதியில் செல்லும் வாகனங்கள்  விபத்தில் சிக்கினால், அதாவது வேகமாக வந்து பிரேக் பிடிக்காமல் தடுப்பில்  மோதினால், வாகனங்கள் பள்ளங்களில் தூக்கி வீசப்படமாட்டாது. மாறாக, ரோலரில்  சுற்றிக் கொண்டு மீண்டும் சாலைக்கே வந்து விடும். இதனால், விபத்து நடக்கும்  வாகனங்களுக்கும் சேதம் அதிகம் ஏற்படாது.  அதேசமயம் லேசான காயங்களுடன்  பயணிகள் உயிர் தப்ப முடியும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் தற்போது  பெங்களூரில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து தற்போது தமிழகத்தில் ஊட்டியில் இந்த ெதாழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து  விபத்து நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 8 இடங்களில் இந்த தொழில்  நுட்பத்தில் ரோலர் கிராஸ் பேரிகார்டுகள் அமைக்கும் பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து ரோலர் கிராஸ்  பேரிகார்டுகள் கொண்டு வரப்பட்டு அமைக்கப்படுவதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Tags : accidents ,road ,Ooty-Kallatti ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்