×

கீரப்பாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டு 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

கூடுவாஞ்சேரி, டிச. 25: கீரப்பாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் அமைக்க, கலெக்டர் உத்தரவிட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், அங்கன்வாடி மையம் வாடகை வீடுகளில் அடிக்கடி இடமாற்றி இயங்குகிறது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சி விநாயகபுரத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க வலியுறுத்தி கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள், 3 ஆண்டுகள் ஆகியும், அங்கன்வாடி மையம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அடிக்கடி வாடகை வீடுகளில் அங்கன்வாடி மையம் இடாமற்றம் செய்யப்பட்டு இயங்குகிறது. இதையொட்டி அங்கு படிக்கும் குழந்தைகள் கடும் அவதியடைகின்றனர். பெற்றோர்களும் வேதனை அடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கீரப்பாக்கம் ஊராட்சி விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோயில் தெரு, ஊமை மாரியம்மன் கோயில் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், கல்லுடைக்கும் தொழிலையே பெரிதும் நம்பி உள்ளனர்.

ஆனால், கல்குவாரி மூடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை மறு ஏலம் விடவில்லை. இதனால் இங்குள்ள மக்கள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளுக்கு வேலை தேடி அலைகின்றனர். பலர் 15 கிமீ தூரம் உள்ள தனியார் கம்பெனிகளுக்கு சென்று வேலை செய்கின்றனர்.
அவர்கள் வீடு திரும்பும் வரை, குழந்தைகளை பக்கத்து வீடுகளில் விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் கடும் அவதிப்படுகிறோம்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி காஞ்சிபுரம் கலெக்டரிடம் நேரில் சென்று மனு கொடுத்தோம். அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஊராட்சி பகுதிகளில் 99 குழந்தைகள் இருப்பது தெரிந்தது.
பின்னர், வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் துவங்கப்பட்டது. கலெக்டர் உத்தரவிட்டு 3 ஆண்டுகள் ஆகியும் சொந்த கட்டிடம் கட்டாததால் விநாயகபுரம் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி மையம், அப்பகுதியில் உள்ள இலவச தொகுப்பு வீடு மற்றும் தனியார் வீடுகளில் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுகிறது.

எந்த வீட்டில் அங்கன்வாடி மையம் இயங்குகிறது என தெரியாமல் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் கடும் அவதியடைகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டால் மழுப்பலான பதில் கூறி, டிமிக்கி கொடுத்து வருகின்றனர். தற்போது செங்கல்பட்டு புதிய மாவட்டமாக இயங்குகிறது. எனவே விநாயகபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க செங்கல்பட்டு கலெக்டர் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Collector ,Anganwadi Center ,Keerappakkam Panchayat ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...