ஓமலூர், தாரமங்கலம் ஒன்றியங்களில் 241 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

ஓமலூர், டிச.24: ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஒன்றியங்களில் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ள 241 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓமலூர், தாரமங்கலம், நங்கவள்ளி உள்ளிட்ட 20 ஒன்றியங்களில், மொத்தம் 2,741 வாக்குச்சாவடிகள் தயாராக உள்ளன. அதன் தலைமை அலுவலர்கள் 2,953 பேரும், அலுவலர்கள் 18,692 பேரும் என 21 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடத்த, அனைத்து அலுவலர்கள் ஒன்றிணைந்து நடத்தை விதிகளை பின்பற்றி, செயல்பட வேண்டும்,’ என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையங்களில், வாக்கு பெட்டிகள் வைக்கும் அறைகள், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட ஒன்றியங்களில், 238 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும், 3 மையங்கள் மிக பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த மையங்களில், அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வெப்கேமரா, வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு, மத்திய அரசு பணியாளர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டுப்பதிவை கண்காணிக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: