×

வத்தலக்குண்டு அருகே டெங்கு ஊரில் சுகாதாரத்துறை ‘டெண்ட்’

வத்தலக்குண்டு, டிச. 24: வத்தலக்குண்டு அருகே டெங்கு அறிகுறி ஊரில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
வத்தலக்குண்டு அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த சற்குணம் மகள் தான்யா (11). ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் தான்யாவுக்கு டெங்கு அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வத்தலக்குண்டு சுகாதாரத்துறையினர் தான்யாவின் ஊரான கோட்டைப்பட்டிக்கு சென்று சுகாதார பணிகளை முடுக்கி விட்டனர். குப்பைகளை அகற்றுதல், வடிகால்களை சுத்தம் செய்தல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். மேலும் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என கேட்டறிந்தனர். இப்பணிகளை டாக்டர் காட்டுராஜா தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர்கள் அகமதுரிபாய், ஜான் பீட்டர், மணிகண்டன், ராஜசேகர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர் ராஜமூர்த்தி கூறுகையில், ‘ கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உருவாகி காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. உள்ளாட்சி அமைப்பு இல்லாததால் உடனடியாக சுகாதார ணிகள் நடைபெறவில்லை. இனியும் இதுபோன்று நடக்காமல் சுகாதார பணிகளை முறையாக செய்து முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : Vattalakunda ,dengue town ,
× RELATED வத்தலக்குண்டு அருகே பள்ளி ஆண்டு விழா