×

வத்தலக்குண்டு அருகே இடம் பெயர்வோர் தின விழிப்புணர்வு

வத்தலக்குண்டு, டிச. 24: சொந்த நாட்டில் வாழமுடியாத நிலையில் தஞ்சம் கேட்டோ, அகதியாகவோ, இன்னொரு நாட்டுக்கு விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பெயரிலோ இடம் பெயர்ந்தோரே இடம் பெயர்வோர் ஆவர். மேலும் உள்நாட்டிலேயே இடம் பெயர்வோரும் உள்ளனர். இடம் பெயர்வோருக்கு ஒவ்வொரு அரசும் பாதுகாப்பும், சலுகைகளும் வழங்க வேண்டும். இடம் பெயர்வோரை தவிர்க்கும் போது அந்நாட்டிற்கும் தான் இழப்பு ஏற்படும். இவர்களை அங்கீகரிக்கும் போது நாட்டின் பொருளாதாரம் உயரும். உலகளவில் இடம் பெயர்ந்தோராக 21 கோடி பேர் உள்ளனர். அதில் 49 சதவீதம் பெண்கள் ஆவர். அவர்கள் உலக மக்கள் தொகையில் 5வது இடத்தில் உள்ளனர்.

நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டியில் சர்வதேச இடம் பெயர்வோர் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சைல்டு வாய்ஸ் அறக்கட்டளை தலைமை அறங்காவலர் அண்ணாதுரை தலைமை வகிக்க, திட்ட இயக்குநர் சார்லஸ் முன்னிலை வகித்தார். எளிதமைப்பாளர் ராமஜெயம் வரவேற்றார். தமிழ்நாடு அங்கத்தினர்களை ஒருங்கிணைக்க சைல்டு வாய்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சிவநாகஜோதி, அழகுராணி, மேரிஜெனிபர், தேவபிரின்சி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

இடம் பெயர்வோருக்கு ஏற்படும் சுகாதார பிரச்னைகள், மனித உரிமை மீறல்கள் பற்றி விழிப்புணர்வு கொடுத்தனர். தொடர்ந்து இடம் பெயர்வோர் முன்னேற்றம் காண உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் அப்பகுதி சமுதாய நலக்குழு பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை எளிதமைப்பாளர் அபிராமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED திண்டுக்கல் அருகே பஸ்- வேன் மோதி 8 பேர் படுகாயம்