×

ரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

திருச்சி, டிச.24: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: ரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 26ம்தேதி துவங்கி ஜனவரி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு 6.1.2020 அன்று அதிகாலை நடைபெற உள்ளது. திருவிழாவை கடந்த ஆண்டுகளைப் போன்று சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி சார்பில் ரங்கம் பேருந்துகள் நிற்குமிடத்தில் பொதுமக்கள் பேருந்துகளில் வசதியாக ஏறவும், இறங்கவும் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். திருக்கோயில் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் ரங்கம் நகரம் முழுவதும் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். முக்கிய திருவிழா நாட்களான 5.1.2020 முதல் 7.1.2020 முடிய நாள் முழுவதும் குடிநீர் குழாய்களில் தண்ணீர்விட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும் தற்காலிக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும். பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கழிவறைகள், தற்காலிக சிறுநீர் கழிப்பிடங்கள் அமைத்திட வேண்டும். அம்மாமண்டபம் படித்துறை, கொள்ளிடம் படித்துறையில் பொதுமக்கள் இரவு, பகல் எந்நேரமும் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் அதிகப்படியான மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள் ஒதுக்கீடு செய்து தரப்பட வேண்டும்.

மின்வாரியத்தின் சார்பில் சீரான முறையில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். இதுதவிர, ரங்கம் கோயிலில் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். முக்கிய நாட்களில் கோயிலில் சிறப்பு ரயில் இயக்கவும், அனைத்து விரைவு ரயில்களும் ரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், கூடுதலான இடஒதுக்கீடு பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து துறை சார்பில் முக்கிய திருநாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க தக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவசர தேவைக்கு கூடுதல் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். தீயணைப்புத் துறையின் சார்பில் முன்னெச்சரிக்கையாக ஆலயத்தினுள் தகரப் பந்தல் மற்றும் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படும். மேலும் இத்துறையின் மூலம் கூடுதல் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும். பொதுமக்கள் அவசர தேவைக்கு இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் மற்றும் 24 மணி நேரமும் மருத்துவ முகாம்களும் நடைபெறும். மேலும், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்திடவும், நெரிசலை கட்டுப்படுத்திடவும் காவல் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல் துறையினர் அறிவிக்கும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

ரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் நிஷா (சட்டம் மற்றும் ஒழுங்கு), ரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாநகர காவல் துணை ஆணையர் வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், ரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், ரங்கம் கோட்ட இணை ஆணையர் வைத்தியநாதன், ரங்கம் வட்டாட்சியர் தர் மற்றும் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Aurangam Ekadasi Festival Coordinating Committee Meeting ,
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...