×

தஞ்சை- திருவாரூர் ரயில்பாதை மின்மய பணி நிறைவு சோதனை ரயில் திருவாரூர் வந்தது

திருவாரூர், டிச.24: தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வரையிலான ரயில் பாதையில் மின்மயம் பணிகள் முடிவுற்றுள்ளதையடுத்து சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது. திருவாரூர் வந்த சோதனை ரயிலுக்கு உபயோகிப்பாளர் சங்கத்தினர் வரவேற்றனர். இந்திய ரயில்வேயில் கடந்த காலங்களில் நிலக்கரியை கொண்டு ரயில் இன்ஜின்கள் இயக்கப்பட்ட நிலையில் பின்னர் அந்த இன்ஜின்கள் அனைத்தும் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செலவு மற்றும் பயண நேரத்தை குறைப்பதற்காகவும், இழுவை திறனை அதிகரிப்பதற்காகவும் தற்போது நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயம் ஆக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தென்னக ரயில்வேயில் ஏற்கனவே சென்னையில் இருந்து விழுப்புரம் வரையில் மின்மயம் இருந்து வரும் நிலையில் விழுப்புரத்தில் இருந்து கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் வரையிலும், இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சை வரையிலும் என 286 கிமீ தூரத்திற்கு ரூ.330 கோடி மதிப்பில் மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்சியிலிருந்து தஞ்சை திருவாரூர் வழியாக காரைக்கால் வரையிலான ரயில் பாதையிலும் இந்த மின்மயம் பணிகள் ரூ.250 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே திருச்சியிலிருந்து தஞ்சை வரையில் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

 அதன் பின்னர் தஞ்சையில் இருந்து திருவாரூர் வரையில் 55 கிமீ தூரத்திற்கு இந்த மின்மய பணிகள் தற்போது முடிவுற்றுள்ளதையடுத்து இதற்கான சோதனை ஓட்டம் என்பது நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதன்படி திருச்சியில் இரவு 7 .10 மணி அளவில் புறப்பட்ட இந்த சோதனை ரயிலானது தஞ்சை வழியாக இரவு 9 மணி அளவில் திருவாரூர் ரயில் நிலையம் வந்தடைந்தது .இதனையடுத்து அந்த ரயிலுக்கு திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அந்த ரயிலானது மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், தஞ்சையில் இருந்து திருவாரூர் வரையிலான மின்மயம் பணிகள் நிறைவு பெற்று பின்னர் நடைபெற்றுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் ஒரு சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே அவைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட உள்ளன. மேலும் திருவாரூரில் இருந்து காரைக்கால் வரையிலான மின்மய பணிகளையும் விரைந்து முடித்து ரயில் சேவையினை பயணிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என்றார். முன்னதாக ரயில்நிலைய மேலாளர் சிவகுமார் வரவேற்றார்.

Tags : Thanjavur - Thiruvarur Railway Railway Electrification Project Thiruvarur ,
× RELATED தஞ்சை- திருவாரூர் ரயில்பாதை மின்மய பணி...