முத்துப்பேட்டை,டிச.24: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்று உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியாகும். இதில் வார்டு 1ல் 541வாக்குகள், வார்டு 2ல் 801வாக்குகள், வார்டு 3ல் 474வாக்குகள், வார்டு 4ல் 329வாக்குகள், வார்டு 5ல் 333வாக்குகள், வார்டு 6ல் 352வாக்குகள், வார்டு 7ல் 977வாக்குகள், வார்டு 8ல் 504வாக்குகள், வார்டு 9ல் 734வாக்குகள் என மொத்த வாக்குகள் 5,045 வாக்காளர்கள் உள்ளனா். இதில் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்காளர்கள் தடுமாற்றம் இல்லாமல் அவர்களுக்கு உரிய வார்டுகள், பூத்துகள் அடங்கிய வாக்கு சாவடிகளில் ஓட்டு போட்டனர். ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தலின் போது வரைமுறை செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஊராட்சி முழுவதும் பெரியளவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது வரைமுறை செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் என்றால் அனைத்து வார்டுகளுக்கும் சமமான வாக்காளர்கள் இருப்பது தான் பொருத்தம். ஆனால் சில வார்டுகளில் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர். இது எதற்காக இப்படி மாற்றி அமைக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது.
இதில் குறிப்பாக அதிகபட்சமாக வார்டு 7ல் 977 வாக்குகள் உள்ளது. இதனை பார்க்கும்போதே இந்த ஊராட்சியில் மிகப்பெரிய ஒரு குளறுபடி உள்ளது என்பது சாட்சியாகும், இதில் 5வது வார்டில் உள்ள ஒரு குடும்பத்திற்கு 6வது வார்டு பட்டியலில் பெயர் உள்ளது, அதேபோல் மற்றொரு குடும்பத்திற்கு 7வது வார்டு பட்டியலில் பெயர் உள்ளது. அதேபோல் ஒரு குடும்பத்தில் கணவருக்கு ஒரு வார்டில், மனைவிக்கு மற்றொரு வார்டில், மகன்களுக்கு மற்றொரு வார்டில் பெயர் உள்ளது. அதேபோல் வெவ்வேறு வார்டுகளில் உள்ளவர்கள் பெயர் இந்த வார்டில் உள்ளது. இப்படி பெரும் குழப்பத்திற்கு இடையே தயார் செய்யப்பட்ட இந்த வாக்காளர் பட்டியலால் ஒரு வார்டு உறுப்பினருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஓட்டு கேட்பது போன்று ஊராட்சி முழுவதும் சென்று தேடி அலைந்து வாக்கு சேகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதேபோல் வாக்காளர்களும் தனது பெயர் எந்த வார்டு வாக்காளர் பட்டியலில் உள்ளது? என்று தேடி அலையும் மற்றொரு சூழ்நிலையும் அமைந்துள்ளது. இதில் குளறுபடியால் தங்களது பெயர்கள் மாயமான வாக்காளர்கள் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் நீங்களாவது எனது ஓட்டு எங்கே உள்ளது..? என்று பார்த்து சொல்லுங்க.. என்று கேட்கின்றனர்.
இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் தாஜிதீன் கூறுகையில்: உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் மொத்தம் ஒன்பது வார்டுகள். 5வது வார்டில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தின் கனவனுக்கு ஒரு வார்டுலும் மனைவிக்கு வேறு ஒரு வார்டிலுமாக ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஒவ்வொரு வீட்டின் முகவரியிலும் கூட குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனை தற்பொழுது தேர்தல் ஆணையம் உடன் சரி செய்ய முடியாவிட்டாலும் வரும் காலத்திலாவது சரி செய்ய வேண்டும் என்றார். வார்டு மாறி உள்ளதால் மக்கள், வேட்பாளர்கள் தவிப்பு ஒரு குடும்பத்தில் கணவருக்கு ஒரு வார்டில், மனைவிக்கு மற்றொரு வார்டில், மகன்களுக்கு மற்றொரு வார்டில் பெயர் உள்ளது. அதேபோல் வெவ்வேறு வார்டுகளில் உள்ளவர்கள் பெயர் இந்த வார்டில் உள்ளது.