×

கும்பகோணம் பெருமாண்டி பூங்காவில் குப்பை தரம் பிரிக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

கும்பகோணம், டிச. 24: கும்பகோணம் பெருமாண்டி பூங்காவில் குப்பை தரம் பிரிக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பணியை நிறுத்தி விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். கும்பகோணம் அடுத்த பெருமாண்டி வடக்குத்தெருவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 1986ம் விரிவாக்கம் செய்யப்பட்ட நகராக மாற்றி வீடுகள் கட்டுவதற்காக பிளாட்டுகள் போடப்பட்டது. அப்போது அப்பகுதியில் 6 ஆயிரம் சதுர அடியில் பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்யாதததால் செடி கொடிகள் மண்டி காடு போல் காட்சியளித்தது. இதனால் சுகாதார சீர்கேடு பரவும் நிலை ஏற்பட்டதால் பூங்கா பகுதியை சீரமைத்து பொதுமக்கள் பராமரித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூங்காவை சீரமைப்பதாக கூறி செடி, கொடிகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதைதொடர்ந்து இட பற்றாகுறை உள்ளது என பூங்காவின் ஓரத்தில் உள்ள பட்டா இடங்களையும் பொதுமக்களிடம் கேட்டு வாங்கி சுற்றுச்சுவர் எழுப்பினர். ஆனால் அந்த இடத்தில் மக்கும், மக்காத குப்பை கிடங்கு அமைக்கவும், பாதாள சாக்கடை கழிவு நீர் கிணறு அமைக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் துவங்கினர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மக்கள் புகார் மனு அனுப்பினர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி பொறியாளர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் நேற்று பெருமாண்டி வடக்குத்தெரு பூங்காவுக்கு சென்று குப்பை தரம் பிரிக்கும் பணியை துவங்க உத்தரவிட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் 100க்கும் மேற்பட்டோர் சந்தானம் தலைமையில் பூங்காவின் முன்புறம் திரண்டு பணிகளை செய்யவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு, பாதாள சாக்கடை கழிவுநீர் கிணற்றால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று மக்கள் தெரிவித்தனர். ஆனால் அதை கேட்காமல் நகராட்சி அதிகாரிகள் பணிகளை துவங்கியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்களிட்டனர். இதையடுத்து பணியை நிறுத்தி விட்டு நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், பெருமாண்டி வடக்குத்தெருவில் பூங்கா அமைத்து தருகிறோம் என்று கூறி எங்களை ஏமாற்றி விட்டனர். தற்போது சுகாதார சீர்கேடு பரவுவதற்கான பணிகளை செய்ய வந்ததால் போராட்டம் நடத்தினோம். மீண்டும் அதிகாரிகள் வந்தால் விரட்டியடிப்போம் என்றனர்.

Tags : protest ,park ,Kumbakonam Perumandi ,
× RELATED அர்ஜெண்டினாவில்...