×

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடாத அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த தயாரான விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை

தாராபுரம், டிச.24: தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு கடந்த 6 ஆண்டாக பாசன தண்ணீர் திறந்துவிடாத அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த தயாரான விவசாயிகளுடன் தாராபுரம் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை மூலம் 6,060 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியும், 7 கிராம மக்களுக்கு குடிநீரும் கிடைத்து வந்தது. அரசாணைப்படி,  உடுமலை பிஏபி அணையில் இருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக உபரி நீரை திறந்து விடுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உப்பாறு அணை முழுவதும் வறண்ட பாலைவனமாக மாறி உள்ளது.

இந் நிலையில், உப்பாறு அணைக்கு உபரி நீர் திறந்து விடாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத பாசன சங்க நிர்வாகிகளை கண்டித்தும் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 20ம் தேதி உப்பாறு அணையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறி விவசாயிகள் திரண்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். விவசாயிகளின் தார்மீக போராட்டத்தை அடக்குமுறையால் அரசு தடுத்து நிறுத்துவதாகவும், தொடர் போராட்டம் நடத்த போவதாகவும் பாசன விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந் நிலையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் சிவகுமார் தலைமையில் உப்பாறு பாசன விவசாயிகளிடம் சப்-கலெக்டர் பவன்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் கூறிய குற்றச்சாட்டை முறைப்படி விசாரணை நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் சப்-கலெக்டர் மற்றும் போலீசார்  முன்னிலையில் உப்பாறு பாசன விவசாயிகள் நேருக்கு நேர் தங்களது புகார்களை கூறி கருத்துகளை வெளியிட்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் தரப்பில் ஒப்புக்கொண்டதை அடுத்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

Tags : Upparu Dam ,
× RELATED உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக்கோரி போராட்டம்