×

உடுமலையில் பணியாற்ற விரும்பாத ஆணையர்கள்

உடுமலை, டிச. 24: உடுமலை நகராட்சியில் நியமிக்கப்படும் ஆணையர்கள், விரைவில் வேறு இடங்களுக்கு பணிமாறுதல் பெற்று செல்வது வாடிக்கையாக உள்ளது. உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு பல்வேறு வகையிலும் ஆண்டுக்கு ரூ.16 கோடி வருமானம் வருகிறது. இந்த நகராட்சியில் ஆணையராக பொறுப்பேற்பவர்கள், அதிகபட்சம் 10 மாதம் தான் பணியாற்றுகின்றனர். அதற்குள் வேறு இடங்களுக்கு பணி மாறுதல் பெற்று சென்றுவிடுகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சரவணகுமார் ஆணையராக பணியாற்றியபோது, நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டன. இந்நிலையில் அவர், நாகர்கோவிலுக்கு பணிமாறுதலாகி சென்றார்.
பல மாதமாக ஆணையர் இல்லாத நிலையில், ராஜாராம் நியமிக்கப்பட்டார். அவரும் சில மாதத்திலேயே  இடமாறுதல் பெற்று சென்றார்.

அதன்பிறகு கடையநல்லூரில் இருந்து பவுன்ராஜ் நியமிக்கப்பட்டார். 10 நாள் பணியாற்றியபின், விடுமுறையில் சென்ற அவர், வால்பாறை நகராட்சிக்கு பணிமாறுதல் வாங்கி சென்றுவிட்டார். தற்போது, நகராட்சி ஆணையர் பணியிடம் காலியாக உள்ளது. நகராட்சி பொறியாளர் தங்கராஜ்தான், பொறுப்பு ஆணையராக உள்ளார். இதனால் பல்வேறு தேவைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் நகராட்சி அலுவலகம் வருபவர்கள் கீழ்நிலை அலுவலர்களைத்தான் தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது. அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். உடுமலை நகராட்சி ஆணையர்கள் இங்கு பணியாற்ற விரும்பாததற்கு, புதிதாக கட்டப்பட்ட ஆணையர் அலுவலக வாஸ்து தான் காரணம் என்கின்றனர் அலுவலர்கள்.

Tags : Commissioners ,Udumalai ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...