×

செம்மரம் வெட்டி கடத்திய சேலத்தை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது ₹2 கோடி மதிப்புள்ள கட்டைகள் பறிமுதல்; நெல்லூர், சேஷாசலம் வனப்பகுதியில்

திருமலை, டிச.22: நெல்லூர், சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து ₹2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து திருப்பதி மாவட்ட வன அலுவலர் நாகார்ஜுன நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாமண்டூர் வனப்பகுதியில் கடத்தல்காரர்கள் செம்மரம் வெட்டிக் கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனச்சரகர் சுப்பா ரெட்டி தலைமையில் துணை வனச்சரகர் நாராயணன் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாமண்டூர் வடக்கு வன சரகத்திற்கு உட்பட்ட தாட்டிமாக்குல வான்கா என்ற இடத்தில் 100க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டிக் கொண்டு கடத்தலுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தனர்.

அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது அனைவரும் கூடி கற்களை வீசி வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். அதிகாலை நேரம் என்பதாலும், இருட்டு காரணம் என்பதாலும் அனைவரும் தப்பி ஓடினர். அதில் சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா கேளயூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் என்பவர் மட்டும் பிடிபட்டார். அவரை கைது செய்து அந்தப் பகுதியில் இருந்த ₹1.5 கோடி மதிப்புள்ள 100 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வெள்ளையனிடம் விசாரணை செய்ததில் ஏற்காட்டை சேர்ந்த கோவிந்தன் என்பவர் தங்கள் கிராமத்தை சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்டோரை 2 பேருந்துகளில் விழுப்புரம் வழியாக வனப்பகுதிக்கு அழைத்து வந்ததாகவும், ஒரு கிலோவுக்கு ₹300 பணம் தருவதாக கூறி மரம் வெட்டுவதற்கு அழைத்து வந்ததாக அவர் தெரிவித்தார். .
 
செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது புதிய வனம் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்குண்டான தண்டனைகள் தற்போது நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 லட்சம் வரை அபராதமும் விதிக்க கூடிய நிலையில், கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டுவதற்காக வந்து தங்கள் வாழ்க்கையை இழப்பதை காட்டிலும், அவரவர் வீடுகளிலேயே வேறு ஏதாவது தொழில் செய்து கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் வாழும் விதமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரி வனச்சரகர் முரளிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வெளிகொண்ட வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற வட்டிபள்ளி கிராமத்தை சேர்ந்த சலபதி, மகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து 6 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கட்டையின் மதிப்பு சுமார் ₹2 லட்சம் இருக்குமென வனச்சரகர் முரளி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரையும் வெங்கடகிரி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Salem ,Nellore ,Seshachalam Forest ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...