×

திருவண்ணாமலை தீபமலை மீது பக்தர்கள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியில் ஜெர்மன் நாட்டு பக்தர்

திருவண்ணாமலை, டிச.22: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, தீபமலை மீது பக்தர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனை ஜெர்மன் நாட்டை சேர்ந்த பக்தர்கள் ஒருவர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடந்தது. கடந்த 10ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள தீபமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

மகாதீபத்தினை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனர். மகா தீபத்தை தரிசிக்க தீபத்திருநாளன்று 2,500 பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்று மலை உச்சிக்கு சென்றனர். சிலர் அனுமதி சீட்டு பெறாமலும் மாற்று பாதையில் மலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மலைமீது சென்ற பக்தர்கள் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை தண்ணீர் குடித்துவிட்டு காலி பாட்டில்களை மலை மீது வீசிவிட்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, பிளாஸ்டிக் கவர்கள், தின்பண்டங்கள் எடுத்து சென்ற கவர்கள் உள்ளிட்டவற்றை மலையிலேயே வீசிவிட்டு சென்றனர்.

இதனால் மலை பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பாட்டில்களை பக்தர்கள் கீழே எடுத்து வரவேண்டும் என அறிவுறுத்திய நிலையிலும் பக்தர்கள் மலைமீதே வீசிசென்றனர். இந்நிலையில், ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் தீபமலையை தூய்மையாக பாதுகாக்கும் வகையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆன்மிக சுற்றுலா பக்தர் லுசி என்பவர், தன்னுடன் தமிழ்நாட்டை சேர்ந்த 2 நபர்களை வைத்துக்கொண்டு, தீபமலையில் பக்தர்கள் வீசிவிட்டு சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை கடந்த ஒரு வாரகாலமாக சாக்குப்பையில் சேகரித்து, கீழே கொண்டு வந்து குப்பை கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் கொட்டி வருகிறார். தீபமலையை பாதுகாக்க வெளிநாட்டவர் கொண்டுள்ள அக்கறை கூட நமது மக்களிடம் இல்லையே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். வெளிநாட்டு பக்தர் ஒருவர் மேற்கொண்டு வரும் இந்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Tags : pilgrims ,German ,Thiruvannamalai Deepamalai ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட்...