×

தன்னார்வ தொண்டு அமைப்பு உதவியுடன் கண்மாய், குளங்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றும் பணி துவக்கம்

ராஜபாளையம், டிச. 22: தினகரன் செய்தி எதிரொலியால் ராஜபாளையம் பகுதியில் உள்ள கண்மாய், குளங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை தன்னார்வ தொண்டு அமைப்பு உதவியுடன் அகற்றும் பணிகள் துவங்கியுள்ளது.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 3 ஆண்டு வறட்சிக்கு பின்னர் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், நகரை சுற்றி உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிறைந்துள்ளது. இந்த நீரில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு விவசாய பயன்பாட்டிற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதோடு ஆகாய தாமரை செடியின் வேரில் உள்ள நச்சு காரணமாக இதன் இலையில் இருந்து வெளியேறும் கரியமில வாயு மனிதர்கள் சுவாசிக்க உகந்ததல்ல என்பது குறித்து நேற்று தினகரனில் படத்துடன் விளக்கமான செய்தி வெளியானது.
இது குறித்து விளக்கம் அளித்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சந்திரமோகன், ‘ஆகாய தாமரை செடிகளை வேருடன் அழிக்க தேவையான பிரத்யோக இயந்திரம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதற்கட்டமாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, பொதுப்பணித்துறை ஏற்பாட்டின் படி ராஜபாளையத்தை சேர்ந்த துளி அமைப்பை சேர்ந்த ராம்குமார், விஷ்ணு உள்ளிட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் முதற்கட்டமாக, பிரண்டைகுளம் மற்றும் புளியங்குளம் கண்மாயில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றும் பணி தொடங்கியது. நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் செலவில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கண்மாயில் உள்ள ஆகாயதாமரை செடிகள் வேருடன் அகற்றப்பட்டு சாலையோரம் கொட்டி வைக்கப்படுகிறது. 2 நாட்களுக்கு பிறகு தண்ணீர் காய்ந்தவுடன், டிராக்டர் மூலம் எடுத்து செல்லப்பட்டு முடங்கியாறு அருகே உள்ள அரசு நிலத்தில் மக்க வைக்கப்படும். செடிகள் மக்கியவுடன் அதை விவசாயிகள் உரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக உதவி பொறியாளர் தெரிவித்தார்.

இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் ராஜபாளையத்தை சுற்றி உள்ள அனைத்து கண்மாய்களில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றவும், அடுத்த ஆண்டு இந்த செடிகள் மீண்டும் துளிர்விடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். நிலத்தடி நீர்மட்டத்தையும், விவசாயத்தையும் காக்கும் விதமாக செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு, சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.




Tags : Commencement ,removal ,NGOs ,
× RELATED காஞ்சிபுரத்தில் வரும் 20ம்தேதி வரதராஜ...