×

(வேலூர்) சிபிஐ, நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ₹9.15 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட 8 பேர் போலீசில் புகார்

திருவலம், டிச.22: சிபிஐ மற்றும் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ₹9.15 மோசடி செய்துள்ளதாக, ஏற்கனவே கைதான 2 பேர் மீது, திருவலம் போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் சிபிஐ, ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மற்றும் உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிபிஐ மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் சீருடையில் 2 மர்ம நபர்கள் தங்களது போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றி, பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டு வந்த காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த அரிஹரன்(28), அவரது கூட்டாளியான விருதம்பட்டை சேர்ந்த ரசூல்மத்தீன்(43) ஆகிய 2 பேரையும், கடந்த 16ம் தேதி கழிஞ்சூரில் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து போலி அடையாள அட்டைகள், சீருடைகள் மற்றும் ₹4.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த செய்தி மோசடி நபர்களின் படத்துடன் நாளிதழில் வெளியானது. இந்நிலையில், மோசடி நபர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிலர் இந்த செய்தியை பார்த்தனர். மேலும், அரிஹரன், ரசூல் மத்தீன் ஆகிய 2 பேரும் மோசடி நபர்கள் என்பதை அறியாமல், அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் கிராமத்தை சேர்ந்த முனிசாமி(26), பிரபு(35), ரஜினி(33), பாஸ்கர்(40), பாபு(37), அன்னலட்சுமி(33), சசிகுமார்(25), திருநாவுக்கரசு(26) ஆகிய 8 பேர், நேற்று திருவலம் காவல் நிலையத்தில் அரிஹரன், ரசூல்மத்தீன் மீது புகார் செய்தனர்.

அதில், அவர்கள் இருவரும் ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருவதாகவும், சிபிஐ அலுவலகப் பணியாளர் மற்றும் நீதிமன்றத்தில் காவலாளி வேலை வாங்கி தருவதாகவும் கூறி, தங்களிடம் ₹9.15 லட்சம் வரை பெற்று கொண்டு, இதுவரையில் வேலை வாங்கி தரவில்லை. இந்நிலையில், அவர்கள் மோசடி ஆட்கள் என்பது செய்தி தாளை பார்த்து தான் தெரிந்து கொண்டோம். எனவே, அவர்களிடம் எங்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கே.பிச்சாண்டி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : CBI ,Velur ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...