×

தண்டனை முடிந்து திரும்புவோர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடாது; கூடுதல் மாவட்ட நீதிபதி பேச்சு...வேலூரில் முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவி

வேலூர், டிச.22: தண்டனை முடிந்து திரும்புவோர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடாது என்று வேலூரில் முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூடுதல் மாவட்ட நீதிபதி பேசினார்.வேலூரில் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசி ஆதரவு சங்க மாவட்ட கிளை சார்பில் முன்னாள் சிறைவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறை அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி(விரைவு நீதிமன்றம்) குணசேகரன் தலைமை தாங்கினார். சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, ஆர்டிஓ கணேஷ் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஜனார்த்தனன் வரவேற்றார்.

நீதிபதி குணசேகரன், முன்னாள் சிறைவாசிகள் 4 பேருக்கு ₹1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பேசியதாவது: சிறை தண்டனை முடித்து, வெளியே வந்தவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த அமைப்பின் மூலம் நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி எஞ்சிய வாழ்க்கையை நல்லபடியாக வாழ வேண்டும். சிறையில் கைதிகளை நடத்தும் விதம் குறித்தும், சிறைச்சட்டங்கள் குறித்தும் சிறை அலுவலர்கள் ெதரிந்து கொள்ள வேண்டும். விசாரணை கைதி மற்றும் தண்டனை கைதிகளின் வேறுபாடுகளை அறிந்து, அவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிந்த கொள்ள வேண்டும். ஆயுள் தண்டனை கைதிகள், நன்னடத்தை கைதிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்களது தண்டனையை குறைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இதைதொடர்ந்து சிறை அலுவலர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags : Returnees ,District Judge ,Ex-Inmates ,Vellore ,
× RELATED இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்