×

பொங்கி எழுந்தால் எதிர்ப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்

புதுச்சேரி, டிச. 22: டெல்லியில் இருந்து வருபவர்களுக்கு புதுச்சேரி மக்களை பற்றி தெரியவில்லை. நாம் பொங்கி எழுந்தால் எதிர்ப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என குயவர்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரி அரசு நலவழிதுறையின் சார்பில் குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார வளாகத்தில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) ரகுநாதன் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் (குடும்ப நலம்) அல்லிரானி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு, தரம் உயர்த்தப்பட்ட சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டையை வழங்கி பேசியதாவது:
இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும்தான் நூற்றுக்கு நூறு சதவீதம் மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கின்றன. ஆயிரம் குழந்தை பிறப்புகளில் 7 அல்லது 8 குழந்தைகள் மட்டும் இறப்பு என்று உள்ளது. அதேபோல் இங்கு தாய்மார்களுக்கும் பாதுகாப்பு உள்ளது. வெளிப்புற சிகிச்சையில் சிறிய மாநிலங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம், ஜிப்மர், இந்திராகாந்தி பொது மருத்துவமனை, இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான். பட்ஜெட்டில் கல்விக்கு அடுத்தப்படியாக மருத்துவத்துக்கு அதிக நிதியை ஒதுக்குகிறோம். கிராமப்புற பகுதிகளில் கூட உயிர்காக்கும் மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம். அதேபோல், புதுச்சேரி மாநில அரசு சார்பில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். இதற்காக ரூ.12 கோடி செலவு செய்ய உள்ளோம். இதன் மூலம் நீங்கள் யாரையும் தேடி செல்ல வேண்டாம். மருத்துவ சிகிச்சைக்கான கடிதத்தை காட்டினால் போதும், இந்தியாவில் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் ரூ.5 லட்சம் வரை இதில் சிகிச்சை பெறலாம்.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை ஏழை மக்களுக்கு கடந்த 2 வருடத்தில் 250 பேருக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அதில் 2 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இந்த வசதி வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. நமக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை, கிரண்பேடி தொல்லை. அதையெல்லாம் மீறி இத்திட்டத்தை நிறைவேற்ற காரணம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். நாங்கள் இவ்வாறு செய்வதால்தான் ஒவ்வொரு ஆண்டும் 2, 3 விருதுகளை வாங்குகிறோம். புதுச்சேரி மாநில மக்களை பற்றி டெல்லியில் இருந்து வருபவர்களுக்கு தெரியவில்லை. அதுதான் பிரச்னை. நாம் அமைதியாக தான் இருப்போம். வீரம் பொங்கி எழுந்தால் நம்மை எதிர்ப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். இந்த அரசு, உங்களுடைய அரசு. நாங்கள் உங்களுக்காக உழைக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஜான்குமார் எம்எல்ஏ., துணை இயக்குநர் (தடுப்பூசித் திட்டம்) முருகன், உதவி இயக்குநர் (மலேரியா) கணேசன் மற்றும் செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். குயவர்பாளையம் மருத்துவ அதிகாரி அஜ்மல் அகமது நன்றி கூறினார்.


Tags : Opponents ,
× RELATED மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு...