×

வண்டலூர், பல்லாவரம், கோயம்பேடு, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஆமை வேகத்தில் நடைபெறும் 9 மேம்பால பணிகளால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, டிச. 22: வண்டலூர், பல்லாவரம், கோயம்பேடு, மேடவாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், திருவொற்றியூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 இடங்களில் ஆமை வேகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மேம்பால பணிகளால் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்பட்டது. குறிப்பாக கடந்த ஆட்சியில், சென்னையின் முக்கிய சாலை சந்திப்புகளான கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, வடபழனி, பாடி, பெரம்பூர், அடையாறு பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதுதவிர மீதமுள்ள முக்கிய சாலைகளிலும் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையில் நீண்ட ஆண்டுகளாக ஒரு பாலம் கூட கட்டப்படாமல் இருந்தது. தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை தொடர்ந்து 2016ம் ஆண்டு முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் மற்றும் பல்லாவரம், கோயம்பேடு, வேளச்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், திருவொற்றியூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 இடங்களில் 2016ம் ஆண்டு முதல் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பாலங்கள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனாலும், 4 ஆண்டுகள் ஆகியும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நடைபெறும் மேம்பாலங்கள் முடிவடையாமல் உள்ளது. குறிப்பாக 50 சதவீத பணிகள் கூட முடியாமல், ஆமை வேகத்திலேயே பணிகள் நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து, வண்டலூர் பகுதி மக்கள் கூறும்போது, “வண்டலூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 700 மீட்டர் நீளமுள்ள பாலம் கட்டும் பணியால் இந்த பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை நுழைவு பகுதியாக இந்த சாலை உள்ளது. தாம்பரத்தில் இருந்து வண்டலூர் சாலையை கடக்க 2 மணி நேரம் ஆகிறது. விடுமுறை நாட்களில் பல மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வர 4 மணி நேரம் மட்டுமே ஆகிறது. ஆனால் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை சுமார் 50 கி.மீ. சாலையை கடக்க 2 மணி நேரம் ஆகிறது. இதனால் இந்த மேம்பாலத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் தந்து ஒப்பந்தம் பெற்றதால் பணிகள் தாமதமா நடைபெற காரணமா?” என்றும் கேள்வி எழுப்பினர்.

அதேபோன்று சென்னையில் முக்கிய சாலைகளாக கோயம்பேடு, பல்லாவரம், வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட மேம்பால பணிகளால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.மேம்பால பணிகள் தாமதமாக நடப்பதற்கு என்ன காரணம் என்று சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை எடுத்து செய்ய நேர்மையான ஒப்பந்ததாரர்கள் யாரும் டெண்டர் எடுக்க முன்வருவதில்லை. காரணம், ஒரு மேம்பால பணியை டெண்டர் எடுக்கும்போதே 20 சதவீத பணத்தை ஆட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. உதாரணமாக, ரூ.100 கோடிக்கு ஒரு டெண்டர் எடுக்கிறோம் என்றால், ரூ.20 கோடியே முதலே கொடுத்து விட வேண்டும். ஒரு வேலையை எடுத்து செய்தால் 20 சதவீதம்தான் லாபம் கிடைக்கும். அதை முதலே கொடுக்க வேண்டும் என்றால், எப்படி அந்த மேம்பாலத்தை தரமாக கட்ட முடியும்? இதனால்தான் ஒப்பந்ததாரர் வேலையை தாமதமாக செய்கிறார்.

 அப்படி செய்தால்தான், பொருட்களின் விலை ஏறி விட்டது என்று கூறி கூடுதல் பணத்தை பெற முடியும். அடுத்து, மணல், எம்-சாண்ட், ஜல்லி தட்டுப்பாடு என்று கூறப்படுகிறது. இதனால், சில ஒப்பந்ததாரர்கள் வேலையை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்து விடுவார்கள். பின்னர் மீண்டும் டெண்டர் விட வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் நேர்மையான ஒப்பந்ததாரர்கள் தமிழக அரசு பணிகளை எடுத்து செய்யவே முன்வர மறுக்கிறார்கள். இதனால் நேர்மையில்லாத, தரமில்லாமல் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே மேம்பால பணிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில் ஒருவரே, பல பினாமி பெயர்களால் 2 அல்லது மூன்று மேம்பால பணிகளை எடுத்த செய்யும் நிலை உள்ளது. இப்படிப்பட்டவர்களால் கண்டிப்பாக குறிப்பிட்ட நாளில் பணிகளை செய்யவே முடியாது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் நேர்மையாக இல்லாமல், டெண்டர் எடுக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாகவே செயல்படுவதும் தாமதத்திற்கு ஒரு காரணம் என்றார்.

Tags : Vandalur ,Pallavaram ,Medavakkam ,Velachery ,Coimbatore ,
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!