×

சம்பா, தாளடி பயிருக்கான உரம் தேவையான அளவு இருப்பு உள்ளது

திருவாரூர், டிச. 22: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கான உரம் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் இதுவரையில் 3 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த பயிர்களுக்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் ஆயிரத்து 320 மெ. டன் யூரியா, ஆயிரத்து 42 மெ.டன் பி.ஏ.பி, 530 மெ. டன் பொட்டாஷ் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தனியார் உர கடைகளில் ஆயிரத்து752 மெ.டன் யூரியா, 848 மெ. டன் டி.ஏ.பி, 850 மெ. டன் பொட்டாஷ் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொண்டு சம்பா சாகுபடியை சிறப்பாக செய்திடலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...