×

தி.நகரில் உள்ள பிரபல ஷோரூம்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பொருட்கள் வாங்கியவர் கைது

சென்னை, டிச. 22: தி.நகரில் உள்ள பிரபல விற்பனை ஷோரூம்களில் போலி ஆவணங்கள் கொடுத்து, வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியவரை போலீசார் கைது செய்தனர். தி.நகர் பகுதியில்  வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம்கள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள பிரபல தனியார் ஷோரூமில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த காதர் மீரான் (64) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வந்தார். விலை உயர்ந்த பொருட்களை தேர்வு செய்த அவர், மாத தவணையில் அவற்றை வாங்கினார்.

இதற்காக, ஷோரூம் ஊழியர்கள் கேட்ட ஆவணங்களை கொடுத்துவிட்டு சென்றார். பின்னர், அவர் கொடுத்து சென்ற ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை போலியானது என தெரியவந்தது.இதையடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, அந்த நபர் மீது போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில், தி.நகரில் உள்ள மற்றொரு ஷோரூமில் நேற்று ஒரு ஆசாமி, போலி ஆவணங்களை கொடுத்து, மாத தவணையில் பொருட்கள் வங்க முயன்றார். கடை ஊழியர்கள் அதை சரிபார்த்தபோது, அந்த ஆவணங்கள் போலியானது என்பது தெரிந்தது. இதுபற்றி கடை ஊழியர்கள் பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், அவர் ஏற்கனவே ஒரு ஷோரூமில் கைவரிசை காட்டிய காதர் மீரான் என்பது தெரிந்தது. இவர், வேறு எந்தெந்த ஷோரூம்களிலும் போலி ஆவணங்கள் கொடுத்து பொருட்கள் வாங்கியுள்ளார் என்று விசாரித்து வருகின்றனர். ஐபோன் மீட்பு: கே.கே.நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 14ம் தேதி  இரவு வடபழனியில் இருந்து, ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார். அப்போது, தனது ஐபோனை ஆட்டோவில் தவறவிட்டார். உடனடியாக, இதுபற்றி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், செல்போன் லொகேஷனை வைத்து ஆய்வு செய்தபோது, வடபழனி ஆற்காடு ரோடு, கமலா தியேட்டர் மற்றும் வடபழனி முருகன் கோயில்  வளைவு பகுதிகளில் இருந்த ஆட்டோக்களை சோதனை செய்தபோது, ஒரு ஆட்டோவில் ஐபோன் இருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, ஒரு மணி நேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Tags : celebrity showrooms ,
× RELATED தி.நகரில் உள்ள பிரபல ஷோரூம்களில் போலி...