×

திருத்தணி முருகன் கோயிலில் புரோக்கர்கள் தொல்லை அதிகரிப்பு: பக்தர்கள் வேதனை: கண்டுகொள்ளாத நிர்வாகம்

திருத்தணி, டிச. 22:  திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு பல பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு நடைபெறும் ஆடி கிருத்திகை, திருப்படி திருவிழா மற்றும் கார்த்திகை விழா, சித்ரை, மாசி பிரமோற்சவம் போன்ற விழாக்களில் பல லட்சம் பக்தர்கள் திரளுவார்கள். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோயிலுக்கு செல்ல மலையடிவாரத்தில் இருந்து பக்தர்கள் கோயில் பஸ்சை பயன்படுத்துகின்றனர். மலைக் கோயிலுக்கு சென்றதும் வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்களில் வரும் பிரமுகர்கள், தங்கள் வாகனங்களை மலையடிவாரத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு நடந்து செல்கின்றனர். இவர்களில் சில பக்தர்கள் இரவில் அங்கேயே தங்குகின்றனர்.

இவ்வாறாக நடந்து செல்லும் பிரமுகர்களை புரோக்கர்கள் மறிக்கின்றனர், அவர்களிடம், கருவறைக்கு அழைத்து சென்று சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்கிறோம்” என்று கூறி ஒரு நபரிடம் இருந்து ரூ.ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை  வாங்குவதாக தெரிகிறது.  பணம் பெற்றுக்கொண்ட பிறகு அந்த பக்தரை  பிரதான வாசல் வழியாக கருவறைக்கு அழைத்து சென்று மூலவரை தரிசனம் செய்வதுடன்,  பிரசாதமும் வழங்கப்படுகிறது. இதைதெரிந்தும் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு கட்டண நுழைவாயிலில் இருந்தும் நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை  அதிகாரிகளும் பெற்று செல்வதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு நடைபெறும் முறைகேடு காரணமாக நிர்வாகத்துக்கு வருடத்துக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறும்போது, “திருப்பதி, திருமலை தேவஸ்தானத்தில் அவ்வப்போது கோயில் ஊழியர்கள் செய்யும் முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்து கைது செய்கிறது. இதுபோல் திருத்தணி முருகன் கோயிலிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் நடவடிக்கைகள் ஈடுபடுவதில்லை. இனிவரும் காலங்களில் முருகன் கோயில்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அடிக்கடி சோதனையில் ஈடுபடவேண்டும்” என்றனர்.

Tags : pilgrims ,Tirunani Murugan Temple ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்