×

செக்கானூரணியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறான டோல்கேட் அகற்ற கோரிக்கை

திருமங்கலம், டிச. 22: திருமங்கலம் அருகே, செக்கானூரணியில் வாகன போக்குவரத்திற்கு இடையூறான டோல்கேட்டை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து தேனி வழியாக குமுளி வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. மதுரையில் இருந்து தேனி வரை இந்த தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் ரோடு கிடையாது. இச்சாலையில் உள்ள விராட்டிப்பத்து, அச்சம்பத்து, நாகமலை, காமராஜர் பல்கலைக்கழகம், செக்கானூரணி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி என அனைத்து ஊர்களின் வழியாகவே பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று திரும்புகின்றன.இந்தநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கட்டணம் வசூலிக்க, செக்கானூரணியில் புதிய டோல்கேட் அமைக்கப்பட்டது. ஆனால், நான்குவழிச்சாலையை தவிர்த்த தேசியநெடுஞ்சாலையில் 100 கி.மீ தூரம் இருந்தால்தான் டோல்கேட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், மதுரை-தேனி சாலை 72 கி.மீ தூரத்திற்குள்தான் உள்ளது. இதனால், இந்த டோல்கேட் செயல்பாட்டிற்கு வரவில்லை. இன்றுவரை டோல்கேட் காட்சிப் பொருளாக நிற்கிறது. இதனால், மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும், இந்த டோல்கேட் சாலையில் அபாயகரமான வளைவில் அமைந்துள்ளது. மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களால் டோல்கேட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, டோல்கேட்டை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : removal ,Secunderabad ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...