×

குஜிலியம்பாறையில் ‘கூட்டணிக்கு வேட்டு’ அதிமுக வேட்பாளரை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் போட்டி தேர்தல் பணிகளில் சிக்கல்

குஜிலியம்பாறை, டிச. 22: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிச.27, 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணிகள், அதிமுக கூட்டணிகள் பிரதானமாக போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் வார்டுகள் பங்கிடுவதில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளே பல இடங்களில் அதிமுகவை எதிர்த்து போட்டியிடுகின்றன. இதுமட்டுமன்றி அதிமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய பல இடங்களிலும் அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்து, அக்கூட்டணி கட்சியினரை எதிர்த்து போட்டியிடுகின்றனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் டிச.30ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் மாவட்ட கவுன்சிலர் பதவி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. மாவட்ட கவுன்சிலர் பதவி தேமுதிகவிற்கு ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த தேமுதிகவினர், அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளரை எதிர்த்து, வேட்புமனு தாக்கல் செய்தனர். குஜிலியம்பாறை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் மீனாட்சிசிவக்குமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் சத்யாமுனியப்பன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த தேர்தல் மோதலால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற இடங்களில் அதிமுகவுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தேமுதிகவினர் கூறுகையில், ‘மாவட்ட கவுன்சிலர் பதவி தேமுதிகவிற்கு தான் ஒதுக்கப்படும் என அதிமுகவினர் தெரிவித்து வந்தனர். இதையடுத்து முன்கூட்டியே தேர்தல் வேலைகளை துவக்கினோம். ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிகவிற்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். இதனால் நாங்களும் எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தலை சந்திக்க உள்ளோம். இதில் நாங்கள் வெற்றி பெற்று அதிமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவோம்’ என்றனர்.  




Tags : TMC ,candidate ,AIADMK ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு