×

ஏற்றுமதி காப்பீடு நிறுவனம் சார்பில் இரு பின்னலாடை நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு

திருப்பூர்,டிச.22: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஆடைகள் கொள்முதல் செய்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள் திவாலானதை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட பின்னலாடை  ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, இ.சி.ஜி.சி., சார்பில், ஒரு கோடி ரூபாய் காப்பீடு தொகை வழங்கினர்.ஏற்றுமதி காப்பீடு நிறுவனத்தின் (இ.சி.ஜி.சி.,) சார்பில், தற்போதைய ஏற்றுமதி சந்தை நிலவரம் குறித்த கருத்தரங்கம் திருப்பூரில் நேற்றுமுன்தினம் நடந்தது.இதில், இ.சி.ஜி.சி., திருப்பூர் கிளை மேலாளர் சுரேந்திர சோனி பேசுகையில்,உலக அளவில் பின்னலாடை வர்த்தகத்தில் கடுமையான போட்டிகளை பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் சந்தித்து வருகிறது. போதிய வியாபாரம் இன்றி ஆடைகள் வாங்கிய பையர்கள் உரிய காலத்தில் பணம்  கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வர்த்தக பாதிப்புகளால், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏராளமான நிறுவனங்கள் திவாலாகி இயக்கத்தை நிறுத்தி வருகின்றன. ஆடை ஏற்றுமதியாளர்கள், மிக கவனமாக செயல்பட வேண்டும். இ.சி.ஜி.சி.,யில் இணைந்துள்ள ஏற்றுமதியாளர்களுக்கு, இத்தகைய இக்கட்டான சூழல்களில், காப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

அதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்துக்கொள்கின்றனர். ஆர்டர்களுக்கு இ.சி.ஜி.சி., பாதுகாப்பு அளிக்காத ஏற்றுமதியாளர்கள், இத்தகைய நிலையை சந்திக்க வேண்டிவந்தால் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.  வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து தொகை கிடைக்காமல், மிகப்பெரிய இழப்பு ஏற்படும். வங்கி கடன் செலுத்த முடியாமலும், வர்த்தகத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். காப்பீடு செய்யப்பட்டுள்ள இரு பின்னலாடை  ஏற்றுமதியாளர்களுக்கு, ரூ.ஒரு கோடி  காப்பீடு தொகை வழங்கப்பட்டது. எனவே, ஏற்றுமதியாளர்கள், தங்கள் அனைத்து ஆர்டர்களுக்கும் இ.சி.ஜி.சி., பாதுகாப்பு அளித்து, தற்காத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி நிறுவனங்களைச்சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : backlog companies ,Export Insurer ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை