×

பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க உதிரிபாகங்கள் பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு, டிச. 22:பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பாண்டுக்கான விலையில்லா சைக்கிள் வழங்க உதிரிபாகங்கள் பொறுத்தும் பணி ஈரோட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு ஆண்டு தோறும் விலையில்லா சைக்கிள்களை வழங்கி வருகிறது. அதன்படி நடப்பாண்டும் பிளஸ் 1 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அரசு வழங்க உள்ளது. இதற்காக தனியார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டு சைக்கிள் தயாரித்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் சைக்கிள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரிகளில் வந்து இறங்கின. இதைத்தொடர்ந்து உதிரிபாகங்களை ஒன்றினைத்து சைக்கிள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பள்ளி கல்வித்துறையினர் கூறியதாவது: மாணவர்கள், மாணவிகளுக்கென சைக்கிள் உதிரிபாகங்கள் ஈரோட்டிற்கு வர துவங்கி உள்ளன. இதில், முதற்கட்டமாக 285 சைக்கிள்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் வந்து சேர்ந்து விட்டன. உதிரிபாகங்களை பொருத்தும் பணியில் ஈரோட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் 4பேர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் சைக்கிள் தயாரிக்கும் பணி நடக்க உள்ளது. இலவச சைக்கிள்களை தமிழக முதல்வர் ஜன., 6ம் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்க உள்ளார். அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : student-student ,
× RELATED ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு...