×

தூத்துக்குடியில் வடிகால் அமைக்க ஒதுக்கிய ரூ.73 கோடி என்னவானது? கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

தூத்துக்குடி, டிச. 19: தூத்துக்குடியில்  வடிகால் பிரச்னைக்கு தீர்வுகாண ஒதுக்கப்பட்ட ரூ.73 கோடி என்னவானது? என கேள்வி எழுப்பியுள்ள வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் பதிலளிக்க வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுதோறும் மழைக் காலத்தில் தூத்துக்குடி மாநகரில் மழைநீர் தேங்கி சுகாதார  சீர்கேடு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. தி.மு.க. ஆட்சியில் பக்கிள் ஓடை  அமைத்து தீர்வு கண்டும் மீண்டும் மழைநீர் தேங்குவதற்கு அதிகாரிகளின்  நிர்வாக சீர்கேடே காரணமாகும். மழைக்காலங்களில் இது போன்று மாநகரத்தில்  மழைநீர் தேங்குவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்தும், அதற்கு  உடனடியாக தீர்வு காண நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என நான் 2016-ம்  ஆண்டில் சட்டமன்ற உறுப்பினாராக பதவி ஏற்றவுடன் நடந்த முதல் சட்டமன்ற  கூட்டத் தொடரில் அன்றைய முதல்வரான மறைந்த ஜெயலலிதா இருந்த போது அரசிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சிறப்பு  நிதியாக தூத்துக்குடி மாநகரத்தில் வடிகால் பிரச்னைக்கு தீர்வு காண ரூ.73-கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

முதல்வர் அறிவித்த அந்த நிதி  ஒதுக்கீடு என்ன ஆனது? மாநகராட்சி சார்பாக அந்த நிதியில் எந்தெந்த பணிகள்  எடுத்து செய்யப்பட்டுள்ளது?  பணிகளின் தற்போதைய நிலை என்ன? அவ்வாறு பணிகள்  செய்து முடித்திருந்தால்  இப்போதைய மழையில் ஏன் மாநகரம் முழுவதும் மழைநீர்  தேங்கியுள்ளது?  மாநகர ஆணையர் இதற்கு உடனடியாக பதில் தர வேண்டும். மேலும்  தூத்துக்குடி மாநகரில் சாலைகள் மற்றும் வடிகால்கள் மழைநீர் கடலுக்கு  செல்லாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இனியாவது மழைநீர் வடிகால் கடலுக்கு  செல்லும் வகையில் அமைத்திட வேண்டும். தற்போது சாலைகளை வெட்டி மழைநீர்  வெளியேற்றப்பட்ட இடங்களில் சிறுபாலங்கள் அமைத்திட வேண்டும்.  சாலைகள்  அனைத்தும் ஒரே மட்டத்தில் அமைத்திட வேண்டும்.  ஏற்கனவே போடப்பட்ட சாலைகளையே  மறுபடி மறுபடியும் போட வேண்டாம். இன்னும் மண் சாலைகளாக இருக்கும் சாலைகளை  தார்ச் சாலைகளாக மாற்றிட வேண்டும்.
ஏற்கனவே உள்ள சாலைகளை அதிக உயரம்  உயத்திட வேண்டாம். பிற மாநகராட்சிகளில் பழைய ரோட்டை தோண்டி எடுத்துவிட்டு  பழைய அளவில் சாலை அமைப்பது போல் அதிக உயரம் உயர்த்தாமல் புதிதாக அமைத்திட  வேண்டும்.  
தற்சமயம் மழைநீர் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் சீரமைக்கப்பட  வேண்டிய மண் மற்றும் தார்ச் சாலைகளை உடனடியாக சரள் வைத்து உயர்த்திட  வேண்டும்.

புதிதாக வாங்கப்பட்ட மோட்டார்களை பம்ப் ரூமிங் அமைத்து பம்ப்  ரூம் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும்.  தற்சமயம் ஷிப்ட் முறையில் இரவும்,  பகலும் பம்ப் ரூமை இயக்குவது போல் தொடர்ந்து இயக்கிட வேண்டும்.
அதேபோல  அரசின் சிறப்பு நிதி ரூ. 73 கோடியில் முந்தைய ஆணையாளரிடம்  லூர்தம்மாள்புரம், வெற்றிவேல்புரம், நேதாஜி நகர், தனசேகரன் நகர்,  ரஹ்மத்நகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்திநகர், ராஜகோபால்நகர்,  மகிழ்ச்சிபுரம், ஆகிய இடங்களில் உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்திட  கோரிக்கை வைத்தேன். இன்றைய தினம் வரை நான் வைத்த கோரிக்கையை அ.தி.மு.க.  அரசு பொருட்படுத்தவே இல்லை.மாறாக தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட்சிட்டி  என்ற பெயரில் ஏற்கனவே நன்றாக இருந்த பூங்காங்களை உடைத்து சீரமைப்பதும்  வ.உ.சி. கல்லூரி முன்பு குளமாக இருந்த நீர்வழி தடத்தை மூடி பூங்காவாக  மாற்றுவதும் அதனால் பிரையண்ட்நகர் பகுதியை தண்ணீரில் மூழ்கடிப்பதும் என  ஆகாத வேலைகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது.இனியாவது  பொதுமக்களிடம் வரி வசூல் செய்யும் மாநகராட்சி நிர்வாகம் அவர்களை மழைநீரில்  தத்தளிக்க விடாமல் பாதுகாப்பது எப்படி என்ற திட்டத்தோடு செயல்பட்டு மக்களை  காப்பாற்றிட மாநகராட்சி அதிகாரிகளை  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!