×

எட்டு மாதங்களாக இழுபறி சேனை ஓடை பாலப்பணியை முடிக்காவிட்டால் போராட்டம் கம்பம் நகராட்சிக்கு மக்கள் எச்சரிக்கை

கம்பம் டிச. 19: கம்பம் நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு புதுப்பள்ளிவாசல் சேனை ஓடை பாலத்தை 8 மாதங்களாக கட்டி முடிக்கப்படாமல் இழுத்தடிப்பதால் நகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் ஒட்டியுள்ள பிளக்ஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்பம் நகராட்சிக்குட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த மே மாதம் கம்பம் நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு புதுப்பள்ளிவாசல் சேனைஓடை பாலத்தை ரூ. 70லட்சம் மதிப்பீட்டில் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டது. ஆனால், ஆறுமாதங்கள் கடந்த பின்பும் பணி பாதி கூட நடக்காமல் முடங்கியுள்ளது. இதனால் கம்பம் புதுப்பள்ளிவாசல், தாத்தப்பன் குளம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த 14ம் தேதி சிறுவன் ஒருவன் பாலத்தில் தவறி விழுந்து வயிற்றில் கம்பி குத்திய நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் 8,9 மற்றும் 13 வது வார்டை சேர்ந்த பொதுமக்கள், பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சிக்கு எதிராக பிளக்ஸ் ஒட்டி தஙகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ``கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சேனைஓடை பாலப்பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாமல் பாதியிலேயே உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து பாலத்தின் கம்பி குத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பால பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க வேண்டுமென பலமுறை கம்பம் நகராட்சி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பாலப்பணியை போர்க்கால நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்’’ என்று கூறினர். இதுகுறித்து கம்பம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, `` சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். எனவே, பாலப்பணி விரைவில் நிறைவடையும்’’ என்றனர்.

Tags : municipality ,Poombam ,
× RELATED கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...