×

சிவகங்கை மாவட்டத்தில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்

சிவகங்கை, டிச. 19:  சிவகங்கை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஊரக பகுதிகளில் டிச.27 மற்றும் டிச.30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி முடிவடைந்தது. தற்போது வேட்பு மனு பரிசீலனை முடிவடைந்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். மாற்று வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். தேர்தல் மனுக்களுக்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சில் ஆகிய பதவிகளுக்கு கட்சி சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளன. ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் இல்லை என்பதால் அவர்கள் முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கியிருந்தனர். மற்ற பதவிகளை காட்டிலும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அனைத்து வேட்பாளர்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் பகுதி வாரியாக வாக்கு கேட்டு வலம் வருகின்றனர். இரவு வரை வாக்கு கேட்டு செல்கின்றனர். பலரது வீடுகளிலும் அமர்ந்து பிரச்சினைகள் குறித்து பேசி தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வேறு வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தால் அவர்களை வாபஸ் பெறச்செய்ய சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
இன்று அதுபோல் ஏராளமான மனுக்கள் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி சார்ந்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வருவார்கள் என வேட்பாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். மாவட்டம் முழுவதும், கிராமப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த பரபரப்பு அதிகம் காணப்படுகிறது.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூறியதாவது: தேர்தலுக்கான கால அவகாசம் மிகக்குறைவாகவே இருந்தது. தற்போது மனுத்தாக்கல் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ளது. பிரச்சாரம் செய்ய குறைவான நாட்களே உள்ளது. ஆனால் வாக்கு கேட்டு செல்ல வேண்டிய பகுதிகள் குறைவானது தான் என்பதால் பிரச்சினை இல்லை. இருப்பினும் உள்ளாட்சி தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் தொடர்ந்து மக்களிடம் சென்று கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் வாக்காளர்கள் மத்தியில் மன மாற்றம் ஏற்படும். எனவே தொடர்ந்து காலை முதல் இரவு வரை வாக்காளர்களை சந்தித்து கொண்டே இருக்கிறோம் என்றனர்.

Tags : Sivaganga District ,electorate ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...