×

மின்சார வாரியத்தில் புரோக்கர்கள் அட்டகாசம்: துணைபோகும் அதிகாரிகள் ஏமாற்றப்படும் நுகர்வோர்கள்

பரமக்குடி, டிச.19:  பரமக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பொதுமக்களின் தேவைகளை சரி செய்து கொடுப்பதாக புகார்ளை பெற்று, அதிகாரிகளின் துணையுடன் சரி செய்து கொடுக்கும் புரோக்கர்கள் சில சமயங்களில் பொதுமக்களை ஏமாற்றுவதாக புகார்கள் வந்துள்ளது.  பரமக்குடி மின்சார வாரியத்தின் அலுவலகம் காட்டுபரமக்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ளது. இங்குள்ள அலுவலகத்தில் பரமக்குடி நகர், நயினார்கோவில், போகலூர் மற்றும் பரமக்குடி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மின்சார சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் மின்சாரம் சார்ந்த பணிகள் குறித்த புதிய இணைப்பு, மின்கம்பம் அமைக்க, விவசாயத்திற்கான மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக தினமும் சுமார் 100க்கு மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.  அப்படி தேவைகளுக்காகவும், புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களை, அலுவலக வளாகத்தில் சுற்றி தெரியும் எலக்ட்ரிஷியன்கள் புரோக்கர்கள் தங்களின் வலையில் சிக்க வைத்து பணம் பறித்து வருகின்றனர். மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, புதிய இணைப்புக்கு அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர். அதனை பயன்படுத்தி கொள்ளும் எலக்ட்ரிஷியன் போர்வையில் இருக்கும் புரோக்கர்கள், பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு கொடுப்பதால், நீங்கள் சென்றால் இணைப்பு வாங்க முடியாது என்று மின் பயனாளிகளை பயத்தை காட்டி, விண்ணப்பத்தினை பெற்று தங்களுக்கு சாதகமாக உள்ள அதிகாரிகளின் துணையுடன் முடித்து கொடுக்கின்றனர். இதற்கு மின்சார வாரியத்திற்கு கட்ட வேண்டிய பணத்தை விட அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டும் என்று பல மடங்கு பணத்தை பொதுமக்களிடமிருந்து கரந்து விடுகின்றனர். புரோக்கர்கள் சிலர் அலுவலகத்தின் உள்ளே சுற்றிதிரிவது தெரித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். சில சமயங்களில் அலுவலகத்தின் மூலம் வேலையை செய்து முடித்து விடுவதாக பணத்தை வாங்கி கொண்டு, புரோக்கர்கள் பொதுமக்களிடம் ஏதாவது சாக்குபோக்கு செல்லி ஏமாற்றி வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து முருகன் கூறுகையில், ‘‘பரமக்குடி மின்சார வாரியத்தின் அலுவலகத்தில் தனியார் மற்றும் மின்சார வாரியத்தின் அலுவலர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்களை அலுவலகத்திற்குள்ளேயே போக விடாமல் வழிமறைத்து, வேலையை முடித்து தருவதாக சொல்லி பணம் பறித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு பணியாற்றும் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் சென்றால் மரியாதை இல்லாததால் பணம் கொடுத்து புரோக்கர்கள் மூலம் வேலையை முடித்து கொள்கின்றனர். ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து புரோக்கர்களாக செயல்படும் பணியாளர்கள் மற்றும் வெளிநபர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : Electricity Board Brokers ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை