×

58 கிராம கால்வாய் மூலம் விருவீடு கண்மாய்க்கு 20 நாள் தண்ணீர் திறக்க வேண்டும் வத்தலக்குண்டு அருகே மக்கள் ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு, டிச.19: வத்தலக்குண்டு அருகே 58 கிராம கால்வாய் தண்ணீர் விருவீடு கண்மாய்க்கு வந்தது 20 நாள் திறந்து விடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழை இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வெங்கிடசமுத்திரம், ஆலங்குளம், சேட்டன்குளம் உள்பட ஏழு கண்மாய்கள் வறண்ட நிலையில் இருந்தன. இப்பகுதியின் முக்கிய விவசாயமான முருங்கை, அவரை விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. சில இடங்களில் முருங்கை, அவரை காய்ந்து போயின. விருவீடு பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கலர் மீன்பண்ணைகளை மூடும் நிலை இருந்தது. இப்பகுதி மக்கள் குடிநீரையே விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. இந்நிலையில் 20 ஆண்டுகளாக போராடி கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட 58 கிராம கால்வாய் வைகை அணையிலிருந்து விருவீடு பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கடந்த மாதம் விருவீடு பொதுமக்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

வைகை அணையில் நீர்மட்டம் 69 அடி வந்ததை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கால்வாயில் வந்த தண்ணீரை நேற்று மேலஅச்சனம்பட்டி அருகே உள்ள மடையை விருவீடு வெங்கிடசமுத்திரம் கண்மாய்க்கு கால்வாய் மூலம் திறந்து விட்டனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு அக்கண்மாயில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. உசிலம்பட்டி பகுதிக்கும் தண்ணீர் போய் சேர வேண்டும் என்பதால் விருவீடு பகுதிக்கு 10 நாள் மட்டுமே விட முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவ்வாறு 10 நாள் மட்டும் தண்ணீர் விட்டால் கண்மாய் பாதியளவு கூட நிரம்பாது என்பதால் குறைந்தது 20 நாளைக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் விருவீடு காளியம்மன் கோவில் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் அப்பகுதி விவசாயிகள் இரும்புத்துரை, சடமாயன், பாபு, ஜெயா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி சமூக ஆர்வலரும் 58 கிராம கால்வாய் பாசனக்குழு தலைவருமான இரும்புத்துரை கூறுகையில், இரண்டு மோட்டார் ஓடினால் எவ்வளவு தண்ணீர் வருமோ அந்த அளவே கால்வாயி–்ல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 10 தினங்களில் கண்மாய் பாதிகூட நிரம்பாது. ஆகையால் வைகை அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் வீணாக விடுவதை கூட நிறுத்தி விட்டு எங்களுக்கு 20 நாளைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றார்.

Tags : Vattalakundu ,village canal ,Varveedu ,
× RELATED தமிழர்களை அடிக்கடி கேலி செய்த வடமாநில...