×

கால்நடை இனவிருத்தி அறிவியல் மூலம் வனவிலங்குகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்

நாமக்கல், டிச.19: கால்நடை இனவிருத்தி அறிவியல் மூலம், வனவிலங்குகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில், இந்திய கால்நடை இனவிருத்தி சங்கத்தின் 35வது மாநாடு மற்றும் கால்நடைகளின் இனப்பெருக்க திறனை மேம்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்த சர்வதேச கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதை துவக்கி வைத்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலசந்திரன் பேசியதாவது:

பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களில், 70 சதவீதம் கால்நடை உற்பத்தி முலமாகவே, 2050ம் ஆண்டில் கிடைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதற்கேற்ப கால்நடைகளின் இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தி திறன் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். நவீன இனப்பெருக்க உத்திகளை கால்நடை மருத்துவர்கள் மற்றும் அறிவியல் வல்லுனர்கள் கற்றுக்கொண்டு, எந்த தடையுமின்றி செயல்படுத்த வேண்டும். கால்நடை இனவிருத்தி அறிவியல் மூலம், உள்நாட்டு கால்நடை இனங்கள் மற்றும் வனவிலங்குகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் பாலசந்திரன் பேசினார்.

கருத்தரங்கில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மோகன், கர்நாடக கால்நடை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரேஷ் ஹொன்னப்பகொல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிசிக்சையியல் துறை இயக்குனர் பாலசுப்ரமணியம், இந்திய கால்நடை இனவிருத்தி சங்கத்தின் செயலாளர் சிவபிரசாத், தலைவர் சந்திரசேகர மூர்த்தி ஆகியோர் பேசினர்.
கருத்தரங்கில் அமெரிக்கா, கனடா, மற்றும் இந்தியாவின் 20 மாநிலங்களில் இருந்து பேராசிரியர்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மல்லசமுத்திரத்தில் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்