×

காரிமங்கலம் நகருக்குள் அதிவேகத்தில் செல்லும் பஸ்களால் மக்கள் பீதி

காரிமங்கலம், டிச.19: காரிமங்கலம் நகருக்குள் அதிவேகத்தில் செல்லும் பஸ்களால், பொதுமக்கள் பீதியுடன் அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரிமங்கலம் வழியாக 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினந்தோறும் சென்று வருகின்றது. தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்கள், காரிமங்கலம் நகருக்குள் செல்வது வழக்கம். இந்நிலையில், கெரகோடஅள்ளி பிரிவு சாலையில் இருந்து, ராமசாமி கோயில் காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டை அடையும்வரை, அதிவேகமாக செல்வதுடன், ஏர் ஹாரன்கள்  ஒலித்தபடியே இயக்கப்படுகிறது. இவ்வழியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள் கலைக்கல்லூரி, வட்டார கல்வி மையம், தாலுகா அலுவலகம், கால்நடை மருத்துவமனை, காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.

தர்மபுரியில் இருந்து வரும் அனைத்து தனியார் பஸ்களும், காரிமங்கலம் நகருக்குள் வரும் போது தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்களை ஒலித்தபடி செல்கின்றன. சில சமயங்களில் தனியார் பஸ்கள் அசுர வேகத்தை கண்டு சாலையில் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு, சாலையை விட்டு ஓட்டம் பிடிக்கும் நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, அதிவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karimangalam ,town ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்