×

கோயில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு

மணமேல்குடி, டிச.19: மார்கழி மாதம் நேற்று தொடங்கியுள்ளதால் மணமேல்குடி பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்செய்தனர்.மாதங்களில் சிறந்தது “மார்கழி” மாதமாகும். பகவான்  கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கின்றேன் என்று பகவத்கீதையில் கூறுவதன் மூலம் இந்த மார்கழி மாதம் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. நேற்று மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து, குளித்துவிட்டு தங்கள் வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு, மாட்டுச் சாணத்தால் விநாயகரை உருவம் செய்து, அதன் மேல் பூசணிப் பூ மற்றும் அருகம்புல் வைத்து விளக்கேற்றி வழிபட்டனர்.

மணமேல்குடியில் உள்ள ஜெகதீஸ்வரர் கோயில், அருணாச்சலேஸ்வரர் கோயில், வடக்கூர் முத்து மாரியம்மன் கோயில், தெற்கூர் முத்துமாரியம்மன் கோயில், அய்யனார் கோயில், பொன்னகரம் ஆதிகேசவ பெருமாள் கோயில்களில் அதிகாலை 4 மணி முதல் நடை திறக்கப்பட்டு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோன்று சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளவர்களும் அதிகாலையிலேயே குளித்து விட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு பிரசாதத்தை பெற்றுக் கொண்டனர். மேலும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் நடைபெறுவது வழக்கமாகும்.

Tags : temples ,Makkali ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு