×

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் சமையல் காரர்களுக்கு கிராக்கி

புதுக்கோட்டை, டிச. 19: உள்ளாட்சி தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளதால் பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு சமையல் செய்ய வேட்பாளர்கள் தனித்தனியாக சமையல் காரர்களை நியமிப்பதால் சமையல் காரர்களுக்கு கிராக்கி
ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 30ம் தேதியும் நடைபெறும். குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்த முக்கிய கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என தற்போது வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பில் தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர்கள், வேட்பாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினரும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். காலை 6 மணிக்கெல்லாம் வீடு வீடாக சென்று கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் தொண்டர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் பிரசாரத்திற்கு செல்லும் போது சாலை ஓரங்களில் உள்ள மரத்தடிகள், வீடுகளில் அமர்ந்து சாப்பாட்டை முடித்துக்கொள்கின்றனர். இவர்களுக்கு தேவையான உணவுகளை ஓட்டல்களில் வாங்குகின்றனர்.

இதனால் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு செலவு அதிகரித்ததால் இவர்களே சமைக்க தொடங்கிவிட்டனர். தனியாக சமையல் காரர்களை சம்பளத்திற்கு பிடித்து அவரிடம் சமையல் பணிகளை ஒப்படைத்துள்ளனர். முதல் நாள் எங்கு பிரசாரம் எந்த ஊரில் காலை, மதியம், இரவு சாப்பாடு என்று முடிவு செய்யப்படுகிறது. அதன்படி அந்தந்த இடங்களில் சமையல் காரர்களை அனுப்பி சமைக்க உத்தரவு கொடுக்கப்படுகிறது. தேவையான மெனுக்ளை தொண்டர்களிடம் கேட்டு முடிவு செய்து அதற்கான சாமான்களை வாங்கி சமையல் காரரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் உதவிக்கு ஆட்களை வைத்து கொண்டு சமையல் செய்து வைத்துவிடுகிறார். அந்த பகுதியில் வேட்பாளர் வரும்போது பிரசாரத்தை முடித்துகொண்டு சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இதேபோல் மதியம், இரவு சாப்பாடு தொண்டர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் சமையல் காரர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் சமையல் காரர்கள் கிடைக்காததால், வெளியூர் சமையல் காரர்களை சில வேட்பாளர்கள் அழைத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் களைகட்ட துவங்கியுள்ளது.

Tags : Pudukkottai district ,warming election campaign ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...