×

செட்டிப்பாளையம் அணைப்பகுதி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?

கரூர், டிச. 19: கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் அணைப்பகுதியை பாதுகாப்பான பகுதியை மாற்றி சுற்றுலா தலமாக மாற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்து கரூர் மாவட்டம் வழியாக வரும் அமராவதி ஆறு, திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. அமராவதி ஆற்றின் கரூர் மாவட்ட பகுதியான செட்டிப்பாளையத்தில் தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்த தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் பாசன கால்வாய்கள் மூலம் 5ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில், தடுப்பணை வளாகம் போதிய பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், அடையாளம் தெரியாத பலர் வந்து மது கு டித்து விட்டு செல்லும் மையமாக மாறி வருகிறது.

இதனால், சாதாரண நாட்களில் தடுப்பணையை வந்து பார்வையிட்டுச் செல்லலாம் என நினைக்கும் மக்கள் கூட வருவதற்கு பயந்து வருகின்றனர்.1992ம் ஆண்டு இந்த தடுப்பணை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும் சமயங்களில் எல்லாம் மதகுகளின் வழியாக வழிந்தோடும் தண்ணீர், ஆற்றில் ஒரு பகுதியும், மற்ற வாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கும் தண்ணீர் இங்கிருந்து திறந்து விடப்படுகிறது.தடுப்பணை பகுதியை சுற்றிலும் இயற்கை வளம் சார்ந்த பகுதிகள் அதிகளவு உள்ளன. ஒரு பக்கம் விவசாய நிலங்கள், மற்றொருபுறம் பரந்து விரிந்த ஆறு என்ற நிலையில் இந்த தடுப்பணை வளாகம் உள்ளது.

ஆனால், ஆள் அரவம் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் இந்த தடுப்பணை வளாகம் உள்ளதால், பொதுமக்கள் வருவதற்கே அஞ்சி வருகின்றனர். எந்த நேரமும் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இந்த பகுதியில் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே, கரூர் மாவட்டத்தில் குறிப்பிடும்படி பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத நிலையில், கரூரில் இருந்து 10கிமீ தூரத்திற்குள் உள்ள இந்த தடுப்பணை வளாகத்தை மேலும் சீரமைத்து, அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த தடுப்பணை வளாக பகுதியை பார்வையிட்டு இதனை சீரமைத்து, மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Chettipalayam Dam ,
× RELATED அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை...