×

நிவாரண பணிகள் முடக்கம் 3800 ஏக்கர் நெல், மணிலா பாதிப்பு

கடலூர், டிச. 19:  உள்ளாட்சி தேர்தல் பணிகளால் கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது போல மணிலா, கரும்பு, உளுந்து, கம்பு, மக்காச்சோளம், பருத்தி ஆகியவையும் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரையில் பரவலாக கனமழை பெய்தது. இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான விவசாய நிலங்களில் ஒரு வாரம் வரையில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது. வடிவதற்கு அதிக நாட்கள் ஆனதால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன.இது தொடர்பாக வேளாண்மைத்துறையினர் முதற்கட்ட கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளனர். அதில், மாவட்டத்தில் 2800 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்ததாகவும், தற்போது அது 2400 ஏக்கராக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், மணிலாவில் 1800 ஏக்கர் வரையில் தண்ணீரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1400 ஏக்கராக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், சுமார் 2,900 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண்மைத்துறை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதனை சர்வே எண்ணுடன் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து அதனை முழுமையாக முடிக்க வேண்டியுள்ளது. தற்போது, உள்ளாட்சி தேர்தல் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருவதால் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுப்பு பணியில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. இதனால், 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் நின்றதால் வேரில் அழுகல் ஏற்பட்ட நிலையில், தண்ணீர் வடிந்து விட்டதாகக் கூறி பாதிப்பாக ஏற்க மறுக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். வேளாண் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.  எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் விரைந்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாய சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Manila ,
× RELATED டூவீலரில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி