×

வலங்கைமானில் கடும் கட்டுப்பாடுகளை கண்டித்து மெட்ரிக் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை

வலங்கைமான், டிச.19: வலங்கைமான் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் புதிய நிர்வாகத்தின் கடும் கட்டுப்பாடுகளை கண்டித்து நேற்று காலை பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளி கடந்த சில நாட்களுக்கு முன் வேறுஒரு நிர்வாகத்திடம் விற்கப்பட்டது. அதனையடுத்து புதிதாக பொறுப்பேற்று கொண்ட பள்ளி நிர்வாகம் மாணவிகள் கொழுசு, வளையல், சங்கிலி உள்ளிட்ட நகைகளை அரசின் உத்தரவிற்கிணங்க பள்ளிக்கு வரும்போது அணிந்து வரக்கூடாது, பூ வைத்துக் கொள்ள கூடாது, ஆறாம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் தற்போது அணிந்துவரும் முழுக்கை சட்டையை அரைக்கை சட்டையாக மாற்ற வேண்டும், பள்ளிக்கு மாணவ,மாணவிகள் பெற்றோர்களின் வாகனங்களில் வரக்கூடாது, கடந்த சில ஆண்டுகளாக பள்ளி வாகனம் பள்ளி வளாகத்தின் உள் சென்று மாணவர்களை ஏற்றும் நடைமுறை இல்லாத நிலையில் தற்போது மாணவர்களை பள்ளி வளாகத்தின் உள்ளே சென்று ஏற்றுவதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்றும், இந்த கல்வி ஆண்டு முடியும் வரை பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் பள்ளியிணை முற்றுகையிட்டனர். முன்னதாக பள்ளி வாகனம் உள்ளே செல்வதை எதிர்த்து கேட்ட பெற்றோர் மீது வலங்கைமான் காவல் நிலையத்தில் புதிய நிர்வாகத்தின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் காவல் துறையினர் மற்றும் தாசில்தார் தெய்வநாயகி ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பெற்றோர்கள் பள்ளியின் புதிய தாளாளர் வந்து உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி பள்ளியின் எதிரே கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மூன்று மணிநேர காலதாமதத்திற்கு பின் பள்ளிக்கு தாளாளர் வந்தபோது காவல்துறையில் பெற்றோர் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என கோஷமிட்டனர். பெற்றோர்களின் கோரிக்கைக்கு உரிய உத்திரவாதம் அளிக்காத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சுகுமாறன் வியாழக்கிழமை பள்ளியில் பி.டி.ஏ கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கல்வி ஆண்டு முடியும் வரையில் பழைய முறையே பின்பற்ற படும் என்று கூறினார். அதனையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Parents ,Matric School ,
× RELATED பேரணி மூலம் பெற்றோர்களுக்கு...