×

மாடு விடும் விழாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் காளைகளை துன்புறுத்தினால் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர், டிச.19: வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு முதன் முறையாக மாடு விடும் விழாவிற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். காளைகளை துன்புறுத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் மாடுவிடும் விழா நடத்துவது தொடர்பாக விழா கமிட்டி, காளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். டிஆர்ஓ பார்த்தீபன், ஏடிஎஸ்பி விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது: பூரணி எனப்படும் இனத்தை சேர்ந்த மாட்டு வகைகள் வேலூர், ஆந்திராவில் அதிகளவில் உள்ளது. இந்த இன வகை மாடுகள் குதிரையைவிட வேகமாக ஓடும். திப்புசுல்தான் காலத்திலேயே போர்ப்படையிலும் இந்த வகை மாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பாரம்பரியமாக காளை விடும் விழா நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 77 இடங்களில் மாடுவிடும் விழா நடந்தது. இந்தாண்டு மாவட்டங்கள் பிரிப்புக்கு பின்பு வேலூர் மாவட்டத்தில் 44 இடங்களில் மட்டுமே நடைபெறவுள்ளது.

இந்தாண்டு முதல் முறையாக மாடுவிடும் திருவிழாவிற்கு அனுமதி பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விழா கமிட்டியினர் டிசம்பர் 26ம் தேதியில் இருந்து 30ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கால்நடை உரிமையாளர்கள் 26ம் தேதியில் இருந்து ஜனவரி 5ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்களுக்கு காளை விடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை. மேலும் காளைகளை துன்புறுத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். அதேபோல் எருது விடும் திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் விழா கமிட்டியினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மனிதர்கள் உயிரிழந்தால் 5 லட்சம், படுகாயம் ஏற்பட்டால் 2.50 லட்சம், சிறுகாயம் அடைந்தால் 1 லட்சம், காளைகள் உயிரிழந்தால் 2 லட்சம், படுகாயம் அடைந்தால் 1.5 லட்சம், சிறுகாயம் ஏற்பட்டால் 1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

மாடுவிடும் இடங்களில் கிணறு, ரயில்வே டிராக் இருந்தால் அதனை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். காளைகளுக்கு இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு இடத்தில் மட்டுமே மாடு விட அனுமதி வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமையிலும் மாடுவிட அனுமதி வழங்கப்படும். மார்ச் மாதம் வரை மாடு விடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்படும். விதிமுறைகளின்படி காளை விடும் விழாவை நடத்தினால் தொடர்ந்து காளைவிடும் விழாவை நடத்தலாம். இல்லையென்றால் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மற்றவர்கள் நமக்கு புத்தி சொல்ல நேரிடும். எனவே விதிமுறைகளின்படி காளை விடும் விழாவை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

Tags :
× RELATED மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது கே.வி.குப்பம் அருகே