×

பெரியபட்டி ஊராட்சியில் வேட்பாளர் பட்டியல் வெளியீடுவதில் தாமதம்

உடுமலை, டிச. 19: குடிமங்கலம்  ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. வார்டு உறுப்பினர்  பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 19  பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 6வது வார்டில் மட்டும்  தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ராஜமாணிக்கத்தின் மனைவி பாலாமணியும், அ.தி.மு.க.  வேட்பாளரும் மனுதாக்கல் செய்திருந்தனர். பெரும்பாலான வார்டுகளில்  போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால், 6வது வார்டிலும்  அ.தி.மு.க. வேட்பாளரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க அ.தி.மு.க.வினர் முயற்சி  மேற்கொண்டனர்.

 இதனால் நேற்று முன்தினம் மனு பரிசீலனை  முடிந்தபிறகும், ஏற்கப்பட்ட மனுக்களின் பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம்  ஏற்பட்டது. பட்டியல் வெளியாக தாமதமானதால், தி.மு.க.வினர் ஊராட்சி  அலுவலகத்திலேயே முகாமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து  இரவு 8 மணிக்கு பாலாமணி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆகிய இருவரின்  மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தி.மு.க.வினர் கூறுகையில், ‘மனு பரிசீலனையின்போது,  ஏதாவது ஒரு காரணத்தை கூறி பாலாமணியின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய  அதிகாரிகளுக்கு ஆளும் கட்சியினர் நிர்பந்தம் கொடுத்துள்ளனர். இதை  அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்தாலும், நிலைமையை புரிந்துகொண்டு,  இரவு வரை அங்கேயே திரண்டிருந்தோம். இதையடுத்து மனு ஏற்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது’ என்றனர்.

Tags : Periyapatti ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ₹4.75 லட்சம் பறிமுதல்