×

காலிங்கராயன் பாசன பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?

ஈரோடு, டிச.19: காலிங்கராயன் பாசன பகுதியில் நெல் அறுவடை அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில் இதுவரை இந்த பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனம் மற்றும் காலிங்கராயன் பாசனம் மூலம் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தாண்டு மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காததால் நெல் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி, அரகன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடை நடந்து வரும் நிலையில் அந்த பகுதிகளில் மட்டும் 14 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், காலிங்கராயன் பாசன பகுதிகளில் நெல் அறுவடை துவங்க உள்ள நிலையில் கடந்த முறை நடந்த வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த பாசன பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை நெல் கொள்முதல் திறப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையத்தில் ஏ கிரேடு ரக நெல் குவிண்டாலுக்கு 1,905 ரூபாயும், சாதாரண நெல் குவிண்டாலுக்கு 1,865 ரூபாய் என்ற வீதத்திலும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வெளி மார்க்கெட்டில் நெல் கொள்முதல் நிலையத்தை விட குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்கிறார்கள். அடுத்த வாரம் காலிங்கராயன் பாசன பகுதிகளில் நெல் அறுவடை துவங்க உள்ள நிலையில் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தனியாருக்கு ஆதரவாக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் 7 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் கூறியதாவது:

காலிங்கராயன் பாசன பகுதியில் 15,743 ஏக்கரில் அனுமதி பெற்ற பாசனமும், அனுமதியற்ற பாசனமாக 10 ஆயிரம் ஏக்கரும் உள்ளது. இதில், இந்தாண்டு 8,000 முதல் 9,000 ஏக்கர் அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கு முன்பாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என நாங்கள் கடந்த முறை நடந்த வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தோம்.
ஆனால், இதுவரை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளனர். இதனால், நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் தனியாரிடம் நெல் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் கருங்கல்பாளையம் பகுதியில் 2 இடங்களிலும், சாவடிபாளையம், கணபதிபாளையம் நால்ரோடு, வெள்ளோட்டம்பரப்பு, நடுப்பாளையம், கொடுமுடி ஆகிய இடங்களில் தலா ஒரு நெல்கொள்முதல் நிலையம் என 7 நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : irrigation areas ,Paddy Purchase Station ,Kalingarayan ,
× RELATED 2 இடங்களில் சூதாட்டம்: 12 பேர் கைது