×

மயிலாடுதுறையில் நடைபெற இருந்த காவிரி டெல்டா பாசனதாரர் சங்க போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு

மயிலாடுதுறை, டிச.19: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நடைபெற இருந்த போராட்டத்தை ஆர்டிஓ பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியிருந்தனர். இதுகுறித்து ஆர்டிஓ மகாராணி தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை ஆர்டிஓ அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் குருகோபிகணேசன், பொதுச்செயலாளர் பனித்தலைமேடு அன்பழகன், பொறுப்பாளர்கள் செந்தில், பைப் மதியழகன், முருகன், செந்தில்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பாசனதாரர் தரப்பில் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையிலுள்ள விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பயிர்காப்பீடு தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மயிலாடுதுறை கோட்டத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கவேண்டும். டெல்டா பாசன பகுதிகளுக்குகுரிய நீரை, உபரிநீர் என்று சொல்லி மேட்டூர் அணையிலிருநது சேலம் பகுதிகளுக்கு கொண்டு செல்வதை தமிழக அரசு கைவிடவேண்டும. மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டத்தை அமைக்கவேண்டும். அதிக மழைபெய்து, மேட்டூர் அணை நிரம்பி தண்ணீரை வெளியேற்றும் நிலையில் காவிரி டெல்டா பகுதி நகர, கிராமங்களில் உள்ள 80 சதவிகித ஏரிகள், குளம், குட்டைகள் இன்னமும் தண்ணீர் நிரம்பாமலேயே உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிமராமத்து என்ற பெயரால் ரூ.1000 கோடிக்கும்மேல் செலவு செய்தும் மேட்டூரில் இருந்து வெளியாகும் நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கும் அவலநிலையே உள்ளது. ஆகவே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மேற்கண்ட நீர் நிலைகளில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நடப்பாண்டிலாவது இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில் ஒருசில கோரிக்கைகள் அரசின் கொள்கை முடிவு என்பதால் இதுகுறித்து அரசுக்கு கோரிக்கையை அனுப்பி வைக்கப்படும் என்றும், தேர்தல் நடைமுறை உள்ளதால் மற்றவை அனைத்தும் தேர்தல் முடிந்ததும் செய்து கொடுக்கப்படும் என்று ஆர்டிஓ உறுதி அளித்தார்.
இதுகுறித்து பாசனதாரர் சங்க தலைவர் பனித்தலைமேடுஅன்பழகன் கூறுகையில், கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஜனவரி 6ம் தேதிவரை எங்களது போராட்டத்தை ஒத்திவைக்கிறோம் என்றார்.

Tags : Cauvery Delta Irrigation Association ,Mayiladuthurai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...