×

டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு நிகரானது மகாராஷ்டிரா முதல்வர் விமர்சனம்

நாக்பூர், டிச. 18: டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதல் ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்துக்கு நிகரானது என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று பேட்டியளித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, கூறியதாவது; நமது சமூகத்தில் திட்டமிட்டே பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள். ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு ஜாலியான்வாலா பாக் படுகொலை சம்பவத்துக்கு நிகரானது. இதுபோன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் ஒரு அச்சத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக இளைஞர்களின் மனதில் அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இளைஞர்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படும் எந்த நாடும் அமைதியான நாடாக இருந்திட முடியாது. அதனால், நம் நாட்டு இளைஞர்களின் மன உறுதியை அசைத்து பார்க்கும் வேலையை செய்ய வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இளைஞர்கள்தான் நமது நாட்டின் எதிர்காலம். இந்தியாவை வளமான நாடாக்கும் ஆற்றம் நமது இளைஞர்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Maharashtra CM ,Jallianwala Bagh ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...