×

திருச்சுழி அருகே பட்டா இடமென கூறி சாலையில் மண் கொட்டியதால் பரபரப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி

திருச்சுழி, டிச.18: திருச்சுழி அருகே பட்டா இடமென கூறி சாலையில் மண் குவியலை குவித்ததால் பரபரப்பு அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். திருச்சுழி அருகே ஒத்தக்கடையிலிருந்து ம.ரெட்டியபட்டிக்கு செல்லும் சாலையிலிருந்து பிரிந்து சிலுக்குபட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இப்பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் செல்ல மங்கம்மாள் சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். செல்லும் வழியில் சுமார் 100 அடிதூரம் மட்டும் பட்டா இடமென கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக பட்டா இடமென கூறப்படும் பகுதி, மக்கள் பயன்பாட்டில் தற்போது வரை இருந்து வந்துள்ளது. ஏற்கனவே மங்கம்மாள் சாலை சிலர் ஆக்கிரமிப்பால் சாலை சுருங்கி காணப்படுவதாகவும், தற்போது திடீரென்று தனியார் இடமென கூறி சாலையில் கிரஷர் மண்ணை குவித்துள்ளதால் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வாகனங்கள் 500 மீட்டர் தொலைவை கடக்க முடியாமல் சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். உடனடியாக சாலை பகுதியில் போடப்பட்டுள்ள மண் குவியலை அகற்ற சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்போவதாக இப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து பஜ ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கூறுகையில், ‘ஒத்தக்கடையிலிருந்து சிலுக்கப்பட்டிக்கு தினந்தோறும் கனரக வாகனங்கள் முதல் பொதுமக்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் இவ்வழியாக சென்று வரும் நிலையில், திடீரென்று கிராவல் மண்ணை கொட்டி வாகனங்கள் செல்ல முடியாதளவிற்கு தனிநபர்கள் அடைத்துள்ளனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளது. எனவே இது சம்மந்தமாக  அதிகாரிகளிடம் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டுள்ள மண்குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். அகற்றாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும்’ என கூறினார்.

Tags : road ,Tirupuzhi ,Pattaya ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து